சென்னை: நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய மற்றும் மாநில அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த, ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ என்ற தனியார் பயண நிறுவனம் வாயிலாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, 57 பேர், நேபாளம் சென்றனர்.
விபரங்கள்
அங்கு ஆக., 26ம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கினர். அவர்களில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளனர்.
‘நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களில், மீட்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை, அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும்’ என, திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷ்ரப், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, சென்னைக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ”தமிழகத்தில் இருந்து யாத்திரை சென்ற 305 பேரில், 220 பேர் மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
விசாரணை
மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மாயமானவர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்,” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க, எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
