-நமது நிருபர்-
சிறப்பாக பணிகளை செய்ய திறனை இறைவன் எனக்கு வழங்க வேண்டும் என ராமர் கோவில் அறக்கட்டளை சிஇஓ ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் சி.இ.ஓ., எனப்படும், தலைமை நிர்வாக அதிகாரியாக, நம் விமானப்படையின் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த பேட்டி:
இந்தப் பொறுப்பிற்குத் தன்னைத் தேர்ந்தெடுத்த தேர்வுக் குழு, ஸ்ரீ ராம் மந்திர் அறக்கட்டளை மற்றும் ராமர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இத்தனை வேட்பாளர்களிலிருந்து அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்ததை நான் ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
விமானப்படையில் 43 ஆண்டுகள் தேசத்திற்கு சேவை செய்த பிறகு, தற்போது பக்தர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை ஸ்ரீ ராமர் எனக்கு வழங்கியிருப்பதை நான் அவரது ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். சிறப்பாக பணிகளை செய்ய திறனை இறைவன் எனக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?
* நம் விமானப்படையில், 38 ஆண்டுகள் சேவையாற்றிய ஜிதேந்திர மிஸ்ரா, 3,000 மணி நேரத்திற்கும் அதிகமான விமானப் பயண அனுபவத்தையும் பெற்றவர்.
* ‘மிராஜ் – 2000’ ரகம் உட்பட 18 வகையான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை இயக்கும் திறன் படைத்தவர்.
* விமானப்படையின் மேற்கு மண்டலப் பிரிவின் தலைவராகப் பணியாற்றி, கடந்த ஏப்ரலில் ஓய்வு பெற்றார். நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட, ‘கார்கில், ஆப்பரேஷன் சிந்துார்’ உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
* இவரது சிறப்பான திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையில், நம் நாட்டின் மிக உயரிய போர்க்கால சிறப்புமிகு சேவைக்கான, ‘சர்வோத்தம் யுத் சேவா பதக்கம்’ அளிக்கப்பட்டுள்ளது.
