சென்னை: முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான, இரண்டு வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ல், கொரோனா கட்டுப் பாடுகளை மீறி, சேலம் டவுன் காவல் நிலையம் பகுதியில், அப்போதைய தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இது தொடர்பாக, பழனிசாமி மற்றும் அக்கட்சியின் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைதை கண்டித்து, கடந்த 2022ம் ஆண்டு பிப்., 28ல் சேலம் கோட்டை மைதானத்தில் பழனிசாமி போராட்டம் நடத்தினார்.
சாலையை வழி மறித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பழனிசாமி தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள், நீதிபதி லட்சுமி நாராயணன் முன், விசாரணைக்கு வந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘அரசியல்வாதிகளுக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு’ எனக் கூறி, பழனிசாமிக்கு எதிரான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதேபோல், தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிபதி, அவர் மீதான வழக்கை, ரத்து செய்து உத்தரவிட்டார்.
