பிரபு தேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மூன்வாக்’. இப்படத்தை மனோஜ் என்.எஸ். இயக்கியுள்ளார். மேலும் திவ்யா மனோஜ், பிரவீன் இலக் ஆகியோருடன் இணைந்து பிஹைண்ட்வுட்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். இப்படத்தில் யோகி பாபு, அஜு வர்கிஸ், அர்ஜுன் அசோகன் மற்றும் யூடியூபர் சதீஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 5 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களையும் அவரே பாடியுள்ளார். முதல் முறையாக ஒரு படத்தில் அனைத்து பாடல்களையும் அவர் இசையமைத்து பாடியுள்ளார். இதே போல் ஒரு சிறப்பம்சமாக இயக்குநர் கதாபாத்திரத்தில் கூடுதல் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதன் மூலம் முதன் முறையாக நடிக்கவும் செய்துள்ளார். இப்படி பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் நீண்ட மாதங்களாக ரிலீஸாகாமல் இருந்தது. கடந்த மே மாதம் வெளியிட படக்குழு ஏற்பாடு செய்தது. ஆனால் அது நடக்கவில்லை. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் தீபாவளிக்கு இப்படம் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் படத்தின் அனைத்து முக்கிய நடிகர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் ரிலீஸ் தேதியை சரியாக குறிப்பிடவில்லை. இந்தாண்டு தீபாவளி நவம்பர் 8ஆம் தேதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தாண்டி தீபாவளி ரேஸில் தமிழில் முதல் படமாக இப்படம் களமிறங்கியுள்ளது.
