நேபாள பெருவெள்ளம்; ”இந்த 3 நாடுகளே காரணம்”

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிச்சரிவால் கோஷி மற்றும் திரிசூலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் அதிகப்படியான பாறைகள் மற்றும் சகதிகளும் அடித்துவரப்பட்டன. இந்த பெருவெள்ளத்தில் 8 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. இதில், 1100 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த நிலையில், கிட்டததட்ட 5 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.  இந்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.  

இந்த பெரு வெள்ளத்தால் நேபாளம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இதையடுத்து, இந்த நாட்டிற்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேபாள அரசு தெரிவித்துள்ள கருத்து ஒட்டு மொத்த உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.  

அதன்படி, நிதியுதவிக்குப் பதிலாக உலகின் முக்கிய மூன்று நாடுகளிடையே இழப்பீடு கோரியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கிற்கு இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தார்மீக பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

இது குறித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் கனால், ”இந்த வெள்ளப்பேரழிவை ஒரு மனிதாபிமான அவசர நிலையாக மட்டும் கருத முடியாது. இது முக்கிய தொழில் மயமான பொருளாதார நாடுகளால் வெளியிடப்படும் பசுமைக்குடில் வாயு/கரியமில வாயுவால் (சிஓ2) நிகழ்ந்த பேரழிவாகும். 

உலகிலேயே அதிகளவு பசுமைக்குடில் வாயுக்களை (சிஓ2) வெளியிடும் சீனாவிற்கும், இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவிற்கும், மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவிற்கும் இதில் முக்கிய பொறுப்பு உள்ளது.

பெரு நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மற்றும் தொழில் வளம் மிக்க நாடுகளும் நேபாளம் போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

பசுமை வீட்டு விளைவால், இமயமலை பனிப்பாறைகள் அழிந்துவிட்டால் கங்கை மற்றும் திரிசூலி போன்ற ஆறுகளை நம்பியிருக்கும் சுமார் 200 கோடி தெற்காசிய மக்களின் நீராதாரம் கேள்விக்குறியாகிவிடும். நாங்கள் நேபாளத்திற்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த தெற்காசிய நாடுகளுக்காகவும் இந்த கருத்தை முன் வைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.  

Source link