‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ‘டோரதி’ எனும் தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இயக்குவது மட்டுமல்லாமல் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்துள்ளார். இவரோடு ஆஸ்கர் வென்ற குனீத் மோங்கா மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இது அவரது 1540வது படமாகும். முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜும் இளையராஜாவும் இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இப்படத்தில் இருந்து இதுவரை வெளியான ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “இந்தப்படம் என்னுடைய பெர்சனலான ஸ்க்ரிப்ட். ரொம்ப வருஷம் முன்னாடியே எழுதிவிட்டேன். கொரனா சமயத்தில் திரைக்கதை எழுதினேன். அதை முடித்தவுடன் உடனே எடுக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதே போல் கதையில் வரும் இரு முக்கிய கதாபாத்திரங்களுக்கு புது நடிகர்கள் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் கதையே அப்படித்தான்.
மகான் பட சமயத்தில் இக்கதையை எடுக்க முடிவெடுத்தேன். ஆனால் அடுத்தடுத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ என வந்ததால் பண்ணமுடியவில்லை. அதே போல் சரியான தயாரிப்பாளரும் இந்த கதைக்கு அமையவில்லை. அதன் பிறகு அமைந்ததும் உடனே எடுக்கத் தொடங்கிவிட்டோம். மதுரை மண் சார்ந்த கதை. கம்மி பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளோம். செப்டம்பர் 11 டொரண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் ப்ரீமியர் ஆகிறது. செப்.25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.
ஒவ்வொரு படம் எடுத்து முடித்த பிறகும் இளையராஜா சாரிடம் செல்லலாமா எனத் தோன்றும். ஆனால் அவரிடம் செல்வதற்கு தகுதியான கதை வேண்டும் என்று பின்வாங்கி விடுவேன். ஆனால் இந்தப்படத்தைப் பார்த்தவுடன் அவர் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. அவரிடம் படத்தை காண்பித்துப் பிடித்திருந்தால் இசை அமையுங்கள் என்றேன். அவரும் படத்தை பார்த்துவிட்டு இசையமைக்க உள்ளே வந்தார். மொத்தம் 25 நாட்கள் இப்படத்திற்காக வேலை செய்தார். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அவர் அளவுக்கு கலை மீது ஆர்வத்தோடும் எனர்ஜியோடும் யாருமே இல்லை என்ற அளவுக்கு அவர் இருக்கிறார். அவருடன் வேலை செய்தது மறக்கமுடியாது” என்றார்.
