சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதனை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்க கார்த்தி மற்றும் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இவர்களோடு புதிதாக மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் புதிதாக இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். இது அவருக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொத்தம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி, “நான் என்ன செய்தாலும் என்னை சப்போர்ட் செய்வது என் ரசிகர்கள் தான். கடந்த 3 வருஷமா அவங்களை ரொம்ப படுத்திட்டேன்னு எனக்கு தெரியும். ஜப்பான்னு ஒரு படம் பண்ணேன். ராஜ் முருகன் சாரோட ஒர்க் பண்ணனும்னு ஆசை பட்டு நடிச்சேன். ஆனா படம் நான் நினைச்ச மாதிரி வரல. அதுக்கப்புறம் ஆவேஷம் வந்துச்சு. அதை பார்த்தபோது இது மாதிரில்ல ஜப்பான் வந்திருக்கனும். மிஸ் பண்ணிட்டோமே என தோனுச்சு. மெய்யழகன் பண்ணேன். ஆக்ஷனே இல்லாம ஒரு படம். பொதுவா நம்ம படங்களுக்கு ஆக்ஷன் தான் பிடிக்கும். இருந்தாலும் அந்த கதை ஒரு காவிம். தமிழ் சினிமாவுல அந்தப்படம் இருக்கணும்னு நினைச்சு பண்ணேன். அதை இப்ப நீங்களும் கொண்டாடுறீங்கன்னு நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
அதுக்கப்புறம் நலன் கூட ஒர்க் பண்ணனும்னு நினைச்சேன். அவர் மாதிரி டைரக்டர் திரும்ப திரும்ப படம் பண்ணிகிட்டே இருக்கணும். ஆர்டிஸ்ட் இல்லாம அவர் இருந்திடக்கூடாதுண்ணு நடிச்சேன். அது ஒரு அற்புதமான அனுபவம். அவரும் ஒரு அற்புதமான கிரியேட்டர், அற்புதமான சினிமா அறிவும் இருக்கிறவர். இப்ப இருக்கிற சிறந்த இயக்குநர்கள் நலன் வந்தா எந்திரிச்சு நிக்கிறாங்க. அப்ப தான் புரிஞ்சிது நலன் மேல அவங்க எவ்ளோ மரியாதை வச்சிருக்காங்கன்னு. அதனால அவர் கூட ஒர்க் பண்ணுனது ரொம்ப மகிழ்ச்சி. ஆனா இந்த தடவை எந்த குறையும் வைக்கல. ஃபுல்லா இறங்கி அடிச்சிருக்கோம். நீங்க சந்தோஷமா பார்த்து என்ஜாய் பண்ணுற படமா இருக்கும். அக்கு வேரா ஆணி வேரா மித்ரன் உட்கார்ந்து என்ன பண்ணா ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணுவாங்களோ அதை பார்த்து பார்த்து பண்ணியிருக்கார். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.
