இதையடுத்து, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கையை அத்துறையின் அமைச்சர் முதல்வர் விஜய் தாக்கல் செய்தார். அதில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதல்வர் விஜய் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் என்றுக் கூறினார்.
முதல்வர் விஜய் குறித்தும் தவெக அரசின் செயல் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததால், தவெக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்காமல் அவருக்கு பதிலாக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா பதிலளித்தனர். இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் கடும் வார்த்தைப் போர் நடைபெற்றது.
இறுதியாக முதல்வர் விஜய் எழுந்து நின்று, “உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் வரும் திங்கட்கிழமை பதிலளிக்கிறேன். நான் இங்கு இல்லையென்றாலும் கூட யார் யார் என்ன என்ன கேள்வி கேட்கிறார்கள் என்பது எனக்கு வந்துவிடும். அனைத்துக்கும் நான் பதில் சொல்கிறேன். பேரவைத் தலைவர் சார்பாக அவர்களிடம் பிராமிஸ் (Promise) கேட்கிறேன். நான் பதில் சொல்லும் போது யாரும் எழுந்து ஓடிட கூடாது…” என்று கூறி சபையை விட்டு வெளியேறினார். இதையடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடைசியாக யார் ஓடி போனார் என்பதை எல்லோரும் பார்த்திருப்பார்கள். இதை டிவியில் காட்டினீர்களா எனத் தெரியவில்லை. முதல்வர் இந்த பதிலை ஒரு மணி நேரம் முன்னாடியே சொல்லிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. யார் ஓடி போனாங்கன்னு எல்லோருக்கும் தெரியும்” என்று சொன்னவுடன் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
