இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் சலுகைகளை பெற்ற பிறகு இறுதி செய்யப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: சலுகை நிபந்தனைகளை வழங்கியவுடன் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவும், இந்தியாவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் முழுமையான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை. இந்த ஒப்பந்தம் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தை இறுதி செய்ய இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: எங்கள் வர்த்தகப் போட்டியாளர்களை ஒப்பிடுகையில், எங்களுக்குச் சாதகமான சுங்கவரி விகிதங்களை வழங்க அமெரிக்கா தயாரானவுடன், நாங்கள் இந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து அதன் விவரங்களை அறிவிப்போம்.

இந்தியாவின் ஒன்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கிற்கு முன்னுரிமையை வழங்கும். அடுத்த சில மாதங்களிலும் ஓரிரு ஆண்டுகளிலும் இந்தியா மேற்கொள்ளவிருக்கும் கனடா, மெக்சிகோ, சிலி உள்ளிட்ட நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களும், ஆசியான், கொரியா மற்றும் ஜப்பான் வர்த்தக ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்வதற்கான முயற்சிகளும் உலக வர்த்தகத்தில் இந்தியாவிற்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

நியூசிலாந்துடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வரும், அதனைத் தொடர்ந்து 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் நடைமுறைக்கு வரும். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார். இந்தியா, இங்கிலாந்து, மொரிஷியஸ், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link