அதன் ஒரு பகுதியாக கடந்த ஓராண்டுக்கு முன்பு, வடகாடு பகுதியில் ராஜபாண்டியின் வீட்டிற்கு அருகில் இருந்த ஓட்டு வீட்டை ராஜராஜனுக்கு சொத்தாகப் பிரித்து வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த வீட்டை ராஜராஜன் பயன்படுத்த முடியாத வகையில், அவரது குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற்றியதுடன், வீட்டையும் ராஜபாண்டி பூட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜராஜனும், அவரது குடும்பத்தினரும் குழந்தைகளுடன் வசிப்பிடமின்றி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், மாவட்ட எஸ்.பி. அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மனு அளித்ததாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ராஜராஜன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ராஜராஜனின் மனைவியின் தாயார் அவரது குழந்தைகளை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜராஜனுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் வீட்டை அவரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வீட்டின் சாவி ராஜபாண்டியால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சாவியைப் பெற்றுக்கொண்ட ராஜராஜன் இன்று சம்பந்தப்பட்ட ஓட்டு வீட்டிற்குச் சென்று, வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ராஜபாண்டி, தனது வீட்டின் அருகில் உள்ள அந்த வீட்டில் ராஜராஜன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜராஜனை தாக்கியதுடன், தான் வைத்திருந்த கத்தியால் அவரை குத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ராஜராஜன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை ராஜபாண்டி தொடர்ந்து விரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அந்தப் பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவரது வீட்டிற்குள் ராஜராஜன் சென்று ஒளிந்துகொண்டதாக கூறப்படுகிறது. அங்கும் சென்ற ராஜபாண்டி, மறைந்திருந்த ராஜராஜனை கத்தியால் குத்தியதுடன், சிலிண்டரை எடுத்து அவரது தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த ராஜராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஜராஜனின் குடும்பத்தினரும், உறவினர்களும் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ராஜராஜன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு ராஜபாண்டியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/09/03/inves-1-2026-09-03-16-51-45.jpg)
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், ராஜராஜன் கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வடகாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
