முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயற்சி!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த மார்ச் மாதம் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் டெலிஷன் என்ற இளைஞர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் ஆய்வாளர் திலீபன் உட்பட 6 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் தங்களுக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என ஆகாஷின் பெற்றோரும் உறவினர்களும் வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கக் இன்று (03.09.2026) காலை, கடற்கரைச் சாலை வழியாகத் திரும்பிய முதலமைச்சர் விஜய்யின் வாகன அணிவகுப்பை, பாதுகாப்பு வளையங்களையும் மீறி ஆகாஷின் குடும்பத்தினர் திடீரென வழிமறித்தனர். ‘நீதி வேண்டும்… நீதி வேண்டும்…’ என முழக்கமிட்டபடி முதலமைச்சரின் காரை நோக்கி அவர்கள் ஓடிவந்ததால், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால் முதலமைச்சரின் வாகனம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. அதனைத் தொடர்ந்து, சாலையில் மறியல் செய்தவர்களைப் பாதுகாப்புப் படையினர் உடனடியாக அப்புறப்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் கார் அங்கிருந்து பாதுகாப்பாகப் புறப்பட்டுச் சென்றது. தலைமைச் செயலகத்தின் மிக முக்கிய பாதுகாப்புப் பகுதியில் முதலமைச்சரின் கான்வாய் மறிக்கப்பட்ட இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link