புதுடில்லி: பதவியில் இருந்து நீக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் ராஜினாமா செய்யும் நீதிபதிகள் உட்பட அரசியல் அமைப்பு சார்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு ஓய்வு கால சலுகைகளை வழங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் டில்லி ஐகோர்ட் முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்த நிலையில் இந்த மனு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவருக்கு எதிராக லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் துவங்கப்பட்ட நிலையில் அவர் ராஜினாமா செய்தார். இதனால் அந்த நடவடிக்கை பயனற்றதாகிவிட்டது.
இந்நிலையில், பிரதீக் வோரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: பதவி நீக்க நடவடிக்கைகளையோ அல்லது நம்பிக்கையில்லா தீர்மான நடவடிக்கைகளையோ தவிர்க்கும் பொருட்டு ராஜினாமா செய்யும் அரசியல் அமைப்பு பதவியில் இருந்தவர்கள், தங்கள் வகித்த பதவியுடன் தொடர்புடைய சலுகைகள் மற்றும் பிற வசதிகளை பெற தகுதியற்றவர்கள்.
இத்தகைய நடைமுறை அரசியல் அமைப்பு விழுமியங்களுக்கு முரணானது. இந்திய அரசியல் அமைப்பின் கட்டமைப்பான சட்டத்தின் ஆட்சி என்பதற்கு நேரடியாக எதிராக உள்ளது. அரசியல் அமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலத்தின் பாதியில் ராஜினாமா செய்யும் எந்த நபரும் அந்த பதவிக்கான சலுகைகள், வசதிகள் பெற தகுதியற்றவர் ஆகிறார். அதனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மோகனா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று( செப்.,03) விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதற்கு விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
