சொத்துப் பிரச்சினையில் அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்திற்கு இரண்டு மனைவிகள். இவரது முதல் மனைவிக்கு ராஜபாண்டி என்ற மகனும் இரண்டு மகள்களும், இரண்டாவது மனைவிக்கு ராஜராஜன் உட்பட இரண்டு மகன்களும் உள்ளனர். இதனிடையே, இரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான ராஜபாண்டியனுக்கும் ராஜராஜனுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே சொத்து தொடர்பாகப் பகை நிலவி வந்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஓராண்டுக்கு முன்பு ராஜராஜனுக்கு ஒரு வீடு பிரித்துக் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சொத்துத் தகராறு மேலும் தீவிரமடைந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு ராஜராஜனுக்கு சாதகமாக வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி அந்த வீட்டின் சாவியும் ராஜராஜனிடம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, தனக்குச் சொந்தமான அந்த வீட்டைச் சுத்தம் செய்வதற்காக ராஜராஜன் இன்று அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ராஜபாண்டியன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த ராஜபாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜராஜனைத் தாக்க முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பித்து ராஜராஜன் ஓட முயன்றபோதும், அவரை விடாமல் துரத்திச் சென்ற ராஜபாண்டியன் கத்தியால் குத்தியும், சிலிண்டரால் தலையில் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் ராஜராஜனின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்த போலீசார், இக்கொலை வழக்கில் ராஜபாண்டியனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
