பனிச்சரிவு அபாயம் குறித்து மத்திய அரசு ஆய்வு! நேபாள துயரத்தை அடுத்து முன்னெச்சரிக்கை

– சிறப்பு நிருபர் –

நேபாள பெருவெள்ள ஆபத்தை தொடர்ந்து, இமயமலையை ஒட்டிய மாநிலங்களில், பனிப்பாறை ஏரி உடைப்பால் ஏற்படும் வெள்ளம் மற்றும் பனிச்சரிவு அபாயங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது.

நம் அண்டை நாடான நேபாளத்தில், பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் அதிக மானோர் உயிரிழந்தனர். மாயமான 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளும் துரிதகதியில் நடந்து வருகின்றன.

கண்காணிப்பு

இந்நிலையில், பனிச்சரிவு அபாயங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து இமயமலையை ஒட்டியுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய அரசின் உள்துறை செயலர் கோவிந்த் மோகன் நேற்று ஆய்வு நடத்தினார்.

‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், அருணாசல பிரதேசம் மற்றும் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலர்கள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் பங்கேற்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர் ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம், பாதுகாப்பு புவிதகவல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தின்போது, ஆபத்து வாய்ப்புள்ள பனிப்பாறை ஏரிகளை கண்காணித்தல், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளை வலுப்படுத்துதல், எச்சரிக்கைகளை இறுதி நிலை வரை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் தங்கள் தயார்நிலை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் விளக்கின.

ஒருங்கிணைப்பு

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பனிப்பாறை வெடிப்பு மற்றும் அதனால் ஏற்படும் வெள்ளம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள், ஆபத்து வாய்ப்புள்ள பனிப்பாறை ஏரிகள் மற்றும பனி படர்ந்த பகுதிகளை கண்காணித்தல், அதிக ஆபத்துள்ள இடங்களை கண்டறிதல், வெள்ள நீர் பாயும் பாதைகள், மக்களை வெளியேற்றுவதற்கான தயார்நிலை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

எச்சரிக்கைகளின் அடிப்படையில், உடனடியாகவும், திறம்படவும் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் மாநில முகமைகள், மாவட்ட நிர்வாகங்கள், அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை பேணுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

கடந்த, 2024ல் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட, பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் குறித்த தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குறிப்பாக அதிக அபாயம் உள்ள காலங்களில், பாதிக்கப்படக்கூடிய பனிப்பாறை ஏரிகள் மற்றும் பனிச்சரிவு அபாயமுள்ள பகுதிகளை, தொடர்ச்சியாகவும் முன்னெச்சரிக்கையுடனும் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link