நடு ரோட்டில் நின்றிருந்த மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, தெருநாய் ஒன்று கடித்து அங்கிருந்து விரட்டிய காட்சி அந்த பெண்ணை காப்பாற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் தொடர்ச்சியாக நாய் கடி சம்பவங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் அளித்தது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ச்சியாக நாய்க்கடி சம்பவங்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை தெருநாய் ஒன்று கடித்து அந்த பெண்ணை காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகர் துடியலூரை அடுத்த என்.ஜி.ஓ காலனி அருகே உள்ள அசோகபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் சாலையோரம் வசித்து வரும் மனநலம் பாதித்த பெண் ஒருவர் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தெருநாய் ஒன்று, பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை விடாமல் கடித்து அங்கிருந்து விரட்டி அந்த பெண்ணை காப்பாற்றியது. இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனிடையே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
