காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், 19 வயது மாணவி ஒருவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்த மறுநாளே இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் ஒருவர் நேற்று (செப்டம்பர் 3) கட்டிடத்தில் இருந்து குதித்து படுகாயமடைந்தார்.
இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவரான சசிதரன், என்பவர், தனியார் பொறியியல் கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து படுகாயம் அடைந்த நிலையில், அவரை உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த விசாரணையில், டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தவர் சசிதரன் என்று போலீசார் தெரிவித்துள்னர்.
மேலும், அவர் தற்கொலைக்கு முயன்றதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் போலீஸார் கூறினர். இதற்கு ஒரு நாள் முன்பு, அதே கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் (Artificial Intelligence and Machine Learning) இரண்டாம் ஆண்டு படித்து வந்த 19 வயதான ஷெரின், நேற்று முன்தினம் (செப்டம்பர் 2) மாலை கல்லூரி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷெரின், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஷெரினின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும், அவரது தாய் பேராசிரியராகப் பணியாற்றி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து முதற்கட்ட விசாரணையில், ஷெரின் மனரீதியான அழுத்தத்தில் இருந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட கடிதம் ஒன்றும் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஷெரின் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் வருவாய்க் கோட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கல்லூரியில் விசாரணை மேற்கொண்டனர். இரு சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இரண்டு நாட்களில் கல்லூரி வளாகத்தில் இரு மாணவர்கள் கட்டிடங்களில் இருந்து குதித்த சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளது.
