எழுதியவர்: அமிதாப் சின்கா
கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஜி.எஸ்.எல்.வி-மார்க் II (GSLV-Mk II) ராக்கெட்டை பயன்படுத்தி, வெள்ளிக்கிழமை அதிகாலை ‘இ.ஓ.எஸ்-05’ (EOS-05) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க
இ.ஓ.எஸ்-05 என்பது பூமியிலிருந்து சுமார் 36,000 கி.மீ தொலைவில் உள்ள புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் இந்தியாவின் முதல் பிரத்யேக படமெடுக்கும் செயற்கைக்கோள் ஆகும். அங்கிருந்து இது நாட்டை தொடர்ச்சியாக கண்காணித்து உடனுக்குடன் படங்களை வழங்கும் சேவையை அளிக்க முடியும். குறைந்த புவி சுற்றுப்பாதைகளில் இந்தியாவிற்கு சொந்தமான மேலும் பல செயல்பாட்டில் உள்ள புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உள்ளன.
அவை பூமியை சுற்றிவந்து அவ்வப்போது இந்திய பகுதிகளின் படங்களை எடுக்கின்றன. ஆனால் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில், செயற்கைக்கோள் பூமியோடு ஒப்பிடும்போது ஒரே இடத்தில் நிலையாக இருக்கும். எனவே எந்த இடைவெளியும் இன்றி ஒரே பகுதியைத் தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட், ஏவப்பட்ட சுமார் 18 நிமிடங்களில் பூமியிலிருந்து 190 கி.மீ-க்கும் அதிகமான உயரத்தில் உள்ள ஒரு மாற்று சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது.
அங்கிருந்து, செயற்கைக்கோள் தனது இறுதி இலக்கான புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையை சென்றடைய அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியான சுற்றுப்பாதை உயர்த்தும் செயலை மேற்கொள்ளும். 2,360 கிலோவிற்கும் அதிகமான எடைக் கொண்ட இ.ஓ.எஸ்-05, இதுவரை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டால் சுமந்து செல்லப்பட்ட மிக கனமான செயற்கைக்கோள் ஆகும்.
இஸ்ரோ அடைந்த தோல்வி
கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது மிக கடினமான கட்டங்களில் ஒன்றை கடந்து வந்த இஸ்ரோவிற்கு, இந்த வெற்றிகரமான ஏவுதல் ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. 2025 மற்றும் 2026-ல் ஏவப்பட்ட ஆறு திட்டங்களில் மூன்று திட்டங்கள், ஏவூர்தி அல்லது விண்கலத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக செயற்கைக்கோள்கள் தங்கள் உத்தேசிக்கப்பட்ட சுற்றுப்பாதைகளை அடைய முடியாமல் தோல்வியில் முடிவடைந்தன. இதன் காரணமாக, மற்றொரு தோல்வியை தவிர்க்க அடுத்தடுத்த திட்டங்கள் நீட்டிக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட இந்த ராக்கெட் பிப்ரவரி மாதத்திலேயே தயாராக இருந்தது, ஆனால் கூடுதல் கட்டப் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளை செய்வதற்கு ஏதுவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், “நமது நாட்டின் விண்வெளித் திட்டத்தில் இது ஒரு பெரிய சாதனையாகும்.
ஏனெனில் தேசிய நடவடிக்கைகளுக்காக புவி- மேடையில் நிலைநிறுத்தப்படும் முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இதுவாகும். இந்த வெற்றி இஸ்ரோ, அதன் தொழில்முறை நண்பர்கள் மற்றும் பெருமளவில் ஆதரவளித்த கல்வித்துறையின் கூட்டு உழைப்பிற்கு கிடைத்த மகுடமாகும்” என்று கூறினார்.
“செயற்கைக்கோளின் அனைத்து அமைப்புகளும் சிறப்பாகவும் இயல்பாகவும் இயங்கி வருகின்றன. சோலார் பேனல் பிரிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டு விட்டது. செயற்கைக்கோள் நன்றாக உள்ளது. வரும் நாட்களில் செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையை உயர்த்தி, புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவோம்,” என்று அவர் கூறினார்.
இஸ்ரோ இந்த ஆண்டு ஜனவரி மாதம் இ.ஓ.எஸ்-என்1 (EOS-N1) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து சென்ற பி.எஸ்.எல்.வி-சி62 (PSLV-C62) திட்டம், பயணத்தின் மூன்றாவது கட்டத்தின் போது ராக்கெட்டில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தோல்வி அடைந்தது. இஸ்ரோவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி-யில் இதேபோன்ற ஒரு தோல்வி கடந்த ஆண்டும் நடந்தது. அந்த ராக்கெட்டிலும் பயணத்தின் மூன்றாவது கட்டத்திலேயே சிக்கல்கள் எழுந்தன.
இருப்பினும், 2025-ஆம் ஆண்டின் மிகவும் முக்கியமான திட்டமான நைசார் (NISAR – NASA-ISRO Satellite Aperture Radar) செயற்கைக்கோள் ஏவுதல் வெற்றிகரமாக முடிந்தது. அது தற்போது செயல்பாட்டில் உள்ளது. நாசாவுடன் இணைந்த முதல் கூட்டாண்மைத் திட்டமான நைசார், விண்வெளியில் செலுத்தப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் ஒன்றாகும். இது இந்தியா மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனங்களின் ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் பலனாகும்.
