நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிச்சரிவால் கோஷி மற்றும் திரிசூலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் அதிகப்படியான பாறைகள் மற்றும் சகதிகளும் அடித்துவரப்பட்டன. இந்த பெருவெள்ளத்தில் 8 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. இதில், 1100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கிட்டததட்ட 5 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இந்த சம்பவம் நேபாளம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையே உலுக்கியுள்ளது.
இந்த பெரு வெள்ளம் சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலக அளவில் சோகத்தை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த பெருவெள்ளத்தின் சகதியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சுரங்கத்திற்குள் சிக்கி 9 நாட்களுக்கு மேலாக போராடிய 2 பேரை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். பெரு வெள்ளத்தால், இடிபட்டு கிடக்கும் பல்வேறு நீர் சுரங்கங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நேபாளத்தில் இருக்கக்கூடிய 12 நீர்மின் நிலைய சுரங்கங்களில் சுமார் 9,000 பேர் வேலை செய்ததாகவும், அதில் குறைந்தது சுமார் 500 பேர் சுரங்குக்குள் வேலை செய்ததாகவும் ஏற்கெனவே நேபாள அரசு தெரிவித்திருந்தது. அதனால் சுரங்குக்குள் சிக்கியவர்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் நேபாள ராணுவம், சீன மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை இணைந்து தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதன்படி திரிசூலில் நீர்மின் திட்ட சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்த போது 2 பேரை உயிருடன் வீரர்கள் மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் ஒருவரான கபிர் மஹாராஜன் என்பவர், சுரங்கத்திற்குள் இருந்து வெளியே வந்த போது சிரித்தபடி மீட்புப் படையிடம் நன்றி கூறினார். மற்றொருவரான சஞ்சய ஷா பேசும் நிலையில் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளாது. இரண்டு பேர் உயிருடன் மீட்கப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
