உயிருடன் வந்த இருவர்; நேபாளத்தில் புதிய நம்பிக்கை

நேபாளத்தில், கடந்த வாரம் ஆகஸ்ட் 26 அன்று கோஷி ஆற்றில் பனிச்சரிவின் காரணமாகப் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை கிட்டதட்ட 1300 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும், கிட்டதட்ட 5 ஆயிரம் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணி கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இந்த மீட்புப் பணியின் ஒரு பகுதியாகத் திரிசூலி நீர் மின் நிலைய சுரங்கத்தில் கடந்த 9 நாட்களாக நேபாள படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இந்திய மீட்பு படை வீரர்களும் இணைந்துள்ளனர்.  இந்நிலையில், தொடர் மீட்புப் பணியில் 9 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கியிருந்த 2 பேரை வீரர்கள் உயிருடன் மீட்டனர்.  

மீட்கப்பட்ட இருவரும் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு மருத்துவக் குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் மேலும் 150 பேரை மீட்கும் பணியை மீட்புப் படையினர் விரைவுபடுத்தியுள்ளனர்.  

இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் உயிருடன் இருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. அதனால், சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பவர்கள் சுவாசிக்க அதிகளவில் ஆக்சிஜன் வாயுவையும் குழாய் மூலம் செலுத்தி வருகின்றனர். 

மீட்கப்பட்டவர்கள், சஞ்சய் ஷா மற்றும் கபீர் மகாராஜன் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். 9 நாள்களுக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், நேபாள வெள்ளத்தில் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் குடும்பத்துக்கு இது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  

Source link