மாதம் ரூ.10,000 சேமித்தால் ஓய்வுக் காலத்தில் ரூ.5.30 கோடியா? மாதம் ரூ.1.19 லட்சம் பென்ஷன் பெற சூப்பர் வழி

ஓய்வுக் காலத்திற்குப் பெரிய நிதியை உருவாக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (NPS) ஆகிய இரண்டும் மிகவும் பிரபலமான திட்டங்களாகும். நீங்கள் 30 வயதில் மாதத்திற்கு ரூ. 10,000 முதலீடு செய்யத் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் அந்தத் தொகையை 5% உயர்த்தினால், 30 ஆண்டுகள் கழித்து 60 வயதில் எதில் அதிக நிதி கிடைக்கும் என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF)

EPF என்பது அரசு சார்ந்த ஒரு நிலையான சேமிப்புத் திட்டமாகும். இதில் வட்டி விகிதத்தை அரசு ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்து அறிவிக்கிறது.

தற்போதைய வயது: 30 ஆண்டுகள் (ஓய்வு வயது: 60)

மாதாந்திர முதலீடு: ரூ. 10,000 (அடிப்படைச் சம்பளத்தில் 12%)

ஆண்டு உயர்வு: 5%

எதிர்பார்க்கப்படும் வட்டி விகிதம்: 8.25% (ஆண்டுதோறும் கூட்டு வட்டி)

நிறுவனத்தின் பங்களிப்பு: அடிப்படைச் சம்பளத்தில் 3.67%

எதிர்பார்க்கப்படும் மொத்த நிதி:

மாதத்திற்கு ரூ. 10,000 முதலீடு செய்து, ஆண்டுதோறும் 5% தொகையை உயர்த்தினால், 30 ஆண்டுகள் முடிவில் முதலாளியின் பங்களிப்பையும் சேர்த்து சுமார் ரூ. 4,43,52,549 (ரூ. 4.43 கோடி) வரை சேரக்கூடும்.

குறிப்பு: 8.25% வட்டி விகிதம் 30 ஆண்டுகளுக்கும் மாறாமல் இருக்கும் என்ற கணிப்பில் இது கணக்கிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக இ.பி.எஃப். வட்டி விகிதங்கள் மாறுபட்டுள்ளன (எ.கா: 1986-2000 காலக்கட்டத்தில் 12% ஆகவும், 2010-11 இல் 9.50% ஆகவும் இருந்தது).

தேசிய ஓய்வூதிய முறை (NPS)

என்.பி.எஸ். (NPS) என்பது சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டமாகும். இதில் பங்குகள் (Equity), அரசுப் பத்திரங்கள் (Government Bonds) மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களில் பணம் முதலீடு செய்யப்படுகிறது.

தற்போதைய வயது: 30 ஆண்டுகள் (ஓய்வு வயது: 60)

மாதாந்திர முதலீடு: ரூ. 10,000

ஆண்டு உயர்வு: 5%

முதலீட்டு முறை: Active Choice (75% பங்குகள் + 25% அரசுப் பத்திரங்கள்)

எதிர்பார்க்கப்படும் சராசரி லாபம்: 12.7%

என்.பி.எஸ். அறக்கட்டளையின் கணிப்புப்படி, 30 ஆண்டுகள் முடிவில் சுமார் ரூ. 5.30 கோடி மொத்த நிதியாக உருவாக வாய்ப்புள்ளது.

இதில் வரி விலக்கு பெற்ற மொத்தத் தொகை (60%). அதாவது சுமார் ரூ. 3.18 கோடி வரை ஒரேத் தொகையாகத் திரும்பப் பெறலாம். எஞ்சிய 40% தொகையை ஆனுவிட்டி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். 6.75% சராசரி லாபம் கிடைத்தால், மாதத்திற்கு சுமார் ரூ. 1.19 லட்சம் ஓய்வூதியமாகப் பெற முடியும்.

இ.பி.எஃப். மற்றும் என்.பி.எஸ்.- ஒரு ஒப்பீடு

சந்தை சார்ந்த பங்கு முதலீடு (75% Equity) இருப்பதால், நீண்ட காலத்தில் EPF-ஐ விட என்.பி.எஸ். அதிக நிதியை (சுமார் ரூ. 5.30 கோடி) உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது.

இ.பி.எஃப். அரசு உத்தரவாதம் கொண்ட நிலையான வட்டி விகிதத்தை (தற்போது 8.25%) வழங்குகிறது. ஆனால் என்.பி.எஸ். சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது.

இ.பி.எஃப். தொகையை ஓய்வின் போது முழுமையாக ஒரேத் தொகையாக எடுக்க முடியும். NPS-ல் 60% தொகையை மட்டுமே ஒரே தொகையாக எடுக்க முடியும்; எஞ்சிய 40% தொகையைக் கட்டாயமாக மாத ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

இ.பி.எஃப். என்றால் என்ன?

இ.பி.எஃப். என்பது ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் (Organised Sector) உள்ள ஊழியர்களுக்கான கூட்டு வட்டி சார்ந்த சேமிப்புத் திட்டமாகும். அடிப்படைச் சம்பளம் ரூ. 15,000 வரை உள்ள ஊழியர்களுக்கு இதில் சேர்வது கட்டாயமாகும். செப்டம்பர் 1, 2014-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு இது விருப்பத் தேர்வாகும். ஊழியர் மற்றும் நிறுவனம் ஆகிய இரு தரப்பும் இதில் பங்களிக்கின்றன. EPFO அமைப்பு மாத அடிப்படையில் கணக்கிட்டு ஆண்டின் இறுதியில் வட்டியை வரவு வைக்கிறது.

என்.பி.எஸ். என்றால் என்ன?

என்.பி.எஸ். என்பது சந்தை சார்ந்த ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். சந்தாதாரர்கள் தங்களுக்கான பென்ஷன் ஃபண்டைத் தேர்ந்தெடுத்து ஆக்டிவ் சாய்ஸ் (Active Choice) அல்லது ஆட்டோ சாய்ஸ் (Auto Choice) முறைகளில் முதலீடு செய்யலாம். இதில் நிலையான வட்டி விகிதம் கிடையாது; முதலீடு செய்யப்படும் சொத்துக்களின் செயல்திறனைப் பொறுத்தே வருமானம் அமையும்.

கணக்கீடுகள் அனைத்தும் தற்போதைய தரவுகள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையிலானவை. எதிர்கால சந்தை மாற்றங்கள் மற்றும் வட்டி விகித மாற்றங்களுக்கு ஏற்ப இறுதி நிதி மாறுபடலாம்.

Source link