ரயில்வே துறை, பிற மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) அல்லது மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கைத் துணையை (Spouse) ஒரே இடத்தில் அல்லது அருகிலுள்ள இடங்களில் பணியமர்த்துவது தொடர்பான விதிகளை ரயில்வே வாரியம் விரிவாகப் தெளிவுபடுத்தியுள்ளது.
பொருத்தமான பணியிடங்கள் காலியாக இருக்கும் பட்சத்திலும், நிர்வாகச் சிக்கல்கள் இல்லாத நிலையிலும் கணவன்-மனைவி இருவரையும் ஒரே இரயில் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியமர்த்த ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பணிபுரிய வாய்ப்பிருந்தும் நிர்வாகக் காரணங்களைக் காட்டி கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை கோரிக்கையை ஏற்க முடியாவிட்டால், அதற்கான தெளிவான காரணத்தை ஊழியருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசுப் பணிகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள 5 முக்கியப் பணி ஒதுக்கீட்டு விதிகள்:
1. கணவன்–மனைவி இருவரும் ரயில்வே ஊழியர்கள்
கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே துறை மற்றும் ஒரே பணி மூப்புப் பிரிவில் (Seniority unit) பணியாற்றினால், தேவையான பணியிடம் இருக்கும் பட்சத்தில் இருவரையும் ஒரே இடத்தில் பணியமர்த்த வேண்டும்.
அதே நேரத்தில், ஒரே இடத்தில் பணியாற்றும் கணவன் அல்லது மனைவி மற்றொருவருக்கு கீழ் பணியாற்றும் நிலை ஏற்படக்கூடாது என்றும் ரயில்வே வாரியம் கூறியுள்ளது.
இதன் நோக்கம், கணவன்–மனைவி இருவரும் இயல்பான குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கும், குறிப்பாக குழந்தைகள் 18 வயதை அடையும் வரை அவர்களின் நலனை கவனிப்பதற்கும் உதவுவதாகும்.
2. இருவரும் ரயில்வே ஊழியர்கள்; ஆனால் வெவ்வேறு மூப்பு அலகுகளில் பணிபுரிந்தால்?
கணவன்–மனைவி இருவரும் ரயில்வே ஊழியர்களாக இருந்தாலும், அவர்கள் வெவ்வேறு மூப்பு அலகுகளில் பணியாற்றினால் விதிமுறை சற்று மாறுபடும்.
இருவரின் பணியிடங்களுக்கும் தேவையான தகுதியான பணியிடங்கள் எந்த நிலையத்தில் உள்ளனவோ, அந்த நிலையத்தில் இருவரையும் பணியமர்த்த முயற்சி செய்ய வேண்டும்.
அத்தகைய பணியிடம் கிடைக்கவில்லை என்றால், பணியாளர் தனது பணிப் பிரிவை (Change of category) மாற்றிக் கொள்ளும் கோரிக்கையை முன்வைக்கலாம். இதுபோன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட விதிகளை கருத்தில் கொண்டு, பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் என வாரியம் கூறியுள்ளது.
3. ஒருவர் ரயில்வே ஊழியர்; மற்றொருவர் மத்திய அரசுப் பணியில் இருந்தால்?
கணவன் அல்லது மனைவியில் ஒருவர் ரயில்வேயிலும், மற்றொருவர் மத்திய அரசின் அனைத்திந்திய சேவைப் பணியிலும் இருந்தால், ரயில்வே ஊழியரை அவரது துணைவர் பணியாற்றும் இடம் அல்லது மாநிலம் அடங்கிய ரயில்வே மண்டலம், பிரிவு அல்லது உற்பத்திப் பிரிவின் எல்லைக்குள் பணியமர்த்த முயற்சி செய்ய வேண்டும்.
அந்த இடத்தில் பணியமர்த்துவது சாத்தியமில்லையெனில், துணைவர் பணியாற்றும் இடத்துக்கு முடிந்தவரை அருகிலுள்ள இடத்தில் பணியிடம் வழங்க வேண்டும்.
4. ஒருவர் ரயில்வேயிலும், மற்றொருவர் பொதுத்துறை நிறுவனத்திலும் பணியாற்றினால்?
கணவன் அல்லது மனைவியில் ஒருவர் ரயில்வே ஊழியராகவும், மற்றொருவர் மத்திய அல்லது மாநில பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றுபவராகவும் இருந்தால், ரயில்வே ஊழியர் தனது துணைவர் பணியாற்றும் இடத்தில் பணியிடம் வழங்குமாறு தனது கட்டுப்பாட்டு அதிகாரியிடம் கோரிக்கை விடுக்கலாம்.
அந்த இடத்தில் பொருத்தமான ரயில்வே பணியிடம் இல்லையென்றால், பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் துணைவரின் பணியிடத்துக்கு அருகிலுள்ள இடத்தில் ரயில்வே ஊழியருக்கு பணியிடம் வழங்க முயற்சி செய்ய வேண்டும்.
அதுவும் சாத்தியமில்லாத சூழலில், ரயில்வே ஊழியர் பணியாற்றும் இடத்திலோ அல்லது அதற்கு அருகிலோ தனது துணைவருக்கு பணியிடம் வழங்குமாறு கோரலாம். இந்தக் கோரிக்கை துணைவரின் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் பரிசீலனைக்காக அனுப்பப்படலாம்.
5. ஒருவர் ரயில்வேயிலும், மற்றொருவர் மாநில அரசுப் பணியிலும் இருந்தால்?
மாநில அரசு ஊழியராக இருக்கும் துணையின் எல்லைக்குட்பட்ட மண்டலத்தில் ரயில்வே ஊழியருக்குப் பணி ஒதுக்கப்படும். அது இயலாத பட்சத்தில், தனது கணவர் அல்லது மனைவி பணிபுரியும் இடத்திற்கே தன்னை மாற்றக் கோரி ரயில்வே ஊழியர் விண்ணப்பிக்கலாம். இக்கோரிக்கை சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகளின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.
நிர்வாக வசதி மற்றும் தகுந்த காலிப்பணியிடங்கள் இருப்பதை பொறுத்தே இந்த இடமாற்றங்கள் உறுதி செய்யப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
