சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கடந்த நிதியாண்டில் பயணித்த பயணிகள் மூலம் ரூ. 1,299 கோடி வருவாய் ஈட்டி, நாட்டின் மிக அதிக வருமானம் ஈட்டிய டாப் 10 ரயில் நிலையங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்திய அளவில் ரூ. 3,337 கோடி வருவாயுடன் புதுடெல்லி ரயில் நிலையம் முதலிடத்தையும், ரூ. 1,692 கோடி வருவாயுடன் மேற்கு வங்கத்தின் ஹவுரா ரயில் நிலையம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்தியில், அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தையும் ரயில் இயக்கத்தையும் இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. தெற்கு ரயில்வே பயணிகள் வசதிகள் குழுவின் உறுப்பினர் ஜாபர் அலி இதுகுறித்துப் பேசுகையில், சென்னை சென்ட்ரல் ஈட்டியுள்ள இந்த கூடுதல் வருவாய், ரயில்வே துறை மேற்கொண்டு வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கு மக்களிடையே கிடைத்துள்ள நல்வரவேற்பை உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவின் மிக முக்கியமான ரயில் போக்குவரத்து மையங்களில் ஒன்றான சென்னை சென்ட்ரல், தினமும் ஏராளமான தொலைதூரம் மற்றும் புறநகர் பயணிகளைக் கையாண்டு வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய நுழைவாயிலாகத் திகழும் இந்த நிலையம், சென்னையை நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வசதி மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ச்சியாகச் செயல்படத்தப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக அதிகரிக்கும் பயணிகள் போக்குவரத்தும் வருவாயும், நாட்டின் முன்னணி ரயில் முனையங்களில் ஒன்றாக சென்னை சென்ட்ரலின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
