”நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்”; மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இத்தாலி நாட்டின் மிக நீண்ட நாட்கள் பதவி வகித்துவரும் பிரதமர் என்ற பெருமையைப் பிரதமர் மெலோனி பெற்றுள்ளார்.  கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி பிரதமராக பதவியேற்ற மெலோனி, இன்றுவரை 1414 நாட்கள் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவியிலிருந்து வருகிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக இத்தாலியின் பிரதமராக யாரும் பதவி வகித்ததில்லை. இந்நிலையில், மிக நீண்ட நாட்கள் பதவி வகித்து சாதனை படைத்த முதல் பிரதமர் என்ற பெருமையை மெலோனி பெற்றுள்ளார். அதே நேரத்தில், இத்தாலியின் முதல் பெண் பிரதமர் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நீண்ட நாள் பதவி வகித்து சாதனை படைத்துள்ள மெலோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பதிவில், ”போருக்குப் பிந்தைய இத்தாலியின் வரலாற்றிலேயே, மிக நீண்ட காலத்திற்குப் பதவி வகித்து வரும் எனது நண்பர் பிரதமர் மெலோனி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மைல்கல், அவரது தலைமையின் மீது இத்தாலிய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.  

இந்தியா மற்றும் இத்தாலிக்கு இடையிலான ‘சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை’ வலுப்படுத்துவதில் அவரது நட்பு முக்கிய பங்காற்றியுள்ளது. நமது நாடுகளின் குடிமக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க, எங்களது நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். வரவிருக்கும் ஆண்டுகளிலும் அவர் தொடர்ந்து வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

Source link