“ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும்”

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள மத்திய மற்றும் அனைத்து கிளை சிறைகளிலும் அலுவல் சாரா உறுப்பினர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் நியமிக்கப்படுவார்கள். அந்த அலுவல் சாரா உறுப்பினர்கள் சிறைகளுக்குச் சென்று அங்குள்ள கைதிகளின் குறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்து, அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இதுவரை எந்தவிதமான அலுவல் சாரா உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை.

இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு, நீதிபதிகள் சிவி கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “இதுவரை எந்தவிதமான அலுவல் சாரா உறுப்பினர்களும் அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்படவில்லை. மேலும், இது தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது” என வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். முதல் கட்டமாக மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள மத்தியச் சிறைகள் உள்ளிட்ட பிற சிறைகளில் அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஆய்வு அறிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளுக்கும் அடிப்படை உரிமைகள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரமும் முக்கியம் ஆகும்” எனத் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link