ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபயனூர் என்ற இடத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமையல் பணியாளராக ஆலம்மாள் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது கணவர் ஆறுமுகம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி (31.08.2026) அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியிடம் சாணிப் பவுடரை கொடுத்து, காலை உணவுத் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட சாம்பாரில் அதைக் கலக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுமி காலை உணவுத் திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சாம்பாரில் அந்தப் பவுடரைக் கலந்துள்ளார். இதனையடுத்து இந்த உணவை குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பாக காலை உணவுத் திட்டத்தின் உணவை ஆசிரியர்கள் சாப்பிட்டுப் பார்த்துள்ளனர். அப்போது, சாம்பாரில் கசப்புத்தன்மை அதிகமாக இருந்துள்ளது.
மேலும், சாம்பாரில் அதிக அளவில் மஞ்சள் நிறப் பொருள் காணப்பட்டதால், ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களுக்கு அந்த உணவைப் பரிமாற வேண்டாம் எனத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஒரு மாணவியின் கையில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மஞ்சள் நிறப் பொடி காணப்பட்டுள்ளது. அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டபோது, இப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது கையில் ஏதோ ஒரு பவுடர் போன்ற பொருளைக் கொடுத்து, அதனை சாம்பாரில் கலக்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் சார்பில் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆலம்மாளின் கணவர் ஆறுமுகத்தை போலீசார் கைது இன்று (04.09.2026) காலை செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை உணவில் சாணி பவுடர் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் உணவை மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன்பாக உணவின் மாதிரியை எடுத்து வைக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாகவும், இந்த நடைமுறையை கடுமையாகப் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
