சீனாவில் சிங்கம் மற்றும் புலிக் குட்டிகளுக்கான மழலையர் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் உள்ள ’லெஹே லெடு’ வனவிலங்கு பூங்காவில் பிறந்த சிங்கம் மற்றும் புலிக் குட்டிகளுக்காக பிரத்யேகமாக மழலையர் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளியின் முதல் நாளான இன்று, விலங்கு பராமரிப்பாளர்கள் சிங்கக்குட்டிகளையும், புலிக்குட்டிகளையும் பிரத்யேக தள்ளுவண்டியில் வைத்து அழைத்து வந்தனர். பின்பு, முதல் நாள் நினைவாக இந்த குட்டிகளுக்குக் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. பொதுவாக, குட்டிகள் தொடர்ந்து கூண்டுகளுக்குள் அடைக்கப்படுவதால் அவற்றின் வேட்டையாடும் குணம் குறைந்துவிடுகிறது. இந்த விளையாட்டு கூடம் மூலம் அவற்றின் தப்பி பிழைக்கும் திறனை உள்ளிட்டவற்றை வளர்க்கப் பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த மழலையர் பள்ளியில் உள்ள குட்டிகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவ கண்காணிப்பு வழங்கப்படுகிறது. இங்குள்ள குட்டிகளுக்கு, பால் மற்றும் இறைச்சி ஆகியவை தினசரி உணவாக அளிக்கப்படுகிறது. இந்த குட்டிகள் குறிப்பிட்ட அளவிற்கு வளர்ந்தவுடன், பூங்காவின் பெரிய விலங்குகள் வாழும் பகுதிக்கு மாற்றப்படும் எனப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிங்கம், புலி ஆகிய இரு வேறு இனங்களின் குட்டிகள் ஒரே இடத்தில் வளர்க்கப்படுவதால், அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பழகவும், விளையாடவும் அதன் மூலமாக உடல் வலிமை பெற முடியும் எனவும் நம்பப்படுகிறது. இந்நிலையில், இந்த மழலையர் பள்ளி குறித்தான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
