ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்’ கீழ் தயாரிக்கப்பட்ட சாம்பாரில் சாணிப்பவுடரைக் கலக்க பள்ளி மாணவி ஒருவரைத் தூண்டிய 48 வயது நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபைலூரில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் மொத்தம் 51 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஆக.31 அன்று காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமைக்கப்பட்ட சாம்பாரின் தரத்தை ஆய்வு செய்வதற்காக, அப்பள்ளியின் ஆசிரியை ரேவதி அதனை ருசித்து சாப்பிட்டுப் பார்த்துள்ளார். அப்போது சாம்பார் வழக்கத்திற்கு மாறாகக் கசப்புத் தன்மையுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை குமுதாவிடம் அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆலோசனையின்பேரில், தலைமை ஆசிரியை குமுதா சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர், அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஆசிரியை சுவைத்துப் பார்ப்பதற்காகத் தனியாக ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்த சாம்பாரில் மட்டுமே சாணிப்பவுடர் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மாணவர்களுக்குப் பரிமாறுவதற்காக வைக்கப்பட்டிருந்த பிரதான சாம்பாரில் அப்பவுடர் கலக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (48) என்பவர், ஒரு பள்ளி மாணவிக்கு ரூ.10 கொடுத்து, அருகிலுள்ள கடையில் சாணிப்பவுடர் வாங்கி வந்து சாம்பாரில் கலக்குமாறு தூண்டியது தெரியவந்தது. அந்த மாணவி ரூ.5-க்கு தின்பண்டம் வாங்கிக் கொண்டு, மீதமிருந்த ரூ.5-க்கு சாணிப்பவுடர் வாங்கி வந்துள்ளார். பின்னர், அந்தப் பவுடரை ஆசிரியை ருசிப்பதற்காகத் தனியாக வைக்கப்பட்டிருந்த சாம்பாரில் மட்டும் கலந்துள்ளார்.
இந்தச் சதிச்செயலுக்கான காரணம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவந்தன. குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்தின் மனைவி அலமேலு, முன்னதாக அதே பள்ளியில் காலை உணவுத் திட்ட சமையலராக பணியாற்றி வந்துள்ளார். அவரது சமையல் தரம் சரியில்லை என்ற புகாரின்பேரில், அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டு வேறொருவர் புதிய சமையலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், புதிய சமையலரின் மீது பழிசுமத்தி பள்ளியின் காலை உணவுத் திட்டத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய செயலில் ஈடுபட்டது அம்பலமானது. இதனையடுத்து, சத்தியமங்கலம் காவல்துறையினர் வியாழக்கிழமை இரவு ஆறுமுகத்தைக் கைது செய்தனர். பின்னர் அவரை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
