‘கட்டா குஸ்தி’ படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 3ஆம் தேதி வெளியானது. இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியிருக்க விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு பிஎம்டபள்யூ காரும் இயக்குநர் செல்லா அய்யாவுக்கு 10 கிராம் கோல்ட் செயின் மற்றும் பிரேஸ்லெட்டும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 40 கிராமில் வெள்ளி காசும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியிருந்தார். இப்படம் தொடர்ந்து 50 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. இதனையொட்டி தயாரிப்பு தரப்பில் 50நாள் வெற்றி விழா நடத்தியது. இதில் படக்குழுவினருடன் அமைச்சர் ராஜ்மோகன், நடன அமைப்பாளர் பிரபு தேவா ஆகியோரும் கலந்து கொண்டனர். பின்பு நடிகர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வினில் ஐஸ்வர்யா லட்சுமி கலந்து கொண்டு பேசுகையில், “என்னுடைய படம் 50 நாள் ஒடி அதற்கான வெற்றி விழா நடத்தி அதில் கலந்து கொண்டது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். இதற்காக அனைவருக்கும் நன்றி. விஷ்ணு விஷால் அற்புதமான ஒரு சக நடிகர். அவர் மேல் மரியாதை கூடிக்கொண்டே போகிறது. அமைச்சர் ராஜ் மோகன் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்காக நன்றி. பிரபு தேவா சாருக்கு நன்றி. அவருடைய டான்ஸை பார்த்து எப்படி இவரால் இப்படி பண்ண முடிகிறது என வியந்திருக்கேன். இயக்குநர் செல்லா சாருக்கு நன்றி. கீர்த்தி கேரக்டர் கொடுத்ததற்கு. எவ்ளோ படம் பண்ணாலும் கீர்த்திக்கு மக்கள் கொடுத்த அன்பு என்றும் என்னுடன் இருக்கும். நான் வேலை செய்த இயக்குநர்களிலேயே ரொம்ப அன்பான இயக்குநர்களில் நீங்களும் ஒருவர். படத்துல வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. என்னை அழகாக காட்டியதற்கும், சம்பவக்காரியாக நடனமாட வைத்ததற்கும் மிரட்டலாக ஸ்டண்ட் செய்ய வைத்ததற்கும்.
மீனு டீச்சராக நடித்த மோக்ஷாவிடம் முன்னதாக பேசினேன். அவர் சில டிரோல்களால் ரொம்ப வருத்தப்பட்டார். ஆனால் அவர் சிறப்பாக நடித்தார். அவருடைய நடிப்பாலும்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. அதனால் டிரோல் டிரோலாக இருக்கட்டும்” என்றார்.
