“அமைச்சரவையில் இடம் பெறுவதில்லை” – வீரபாண்டியன் திட்டவட்டம்!

த.வெ.க. ஆதரவு கட்சிகளின் 2ஆம் கட்ட கூட்டம் வரும் 9ஆம் தேதி (09.09.2026)  நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் இன்று (04.09.2026) மாலை சந்தித்துப் பேசினர்

அதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியனை, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இதனையடுத்து வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இடதுசாரிகள் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்து த.வெ.க.வை ஆதரித்தோம். அதேபோல், மக்களாட்சியில் ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக த.வெ.க.வை நாங்கள் ஆதரித்தோம். அரசுக்கு வெளியிலிருந்து  ஆதரவு கொடுக்கிறோம். அமைச்சரவையில் நாங்கள் இடம்பெறவில்லை. கூட்டணியிலும் நாங்கள் இடம்பெறவில்லை. 

அதே நேரத்தில், வெளியிலிருந்து நாங்கள் ஆதரிக்கிற காரணத்தினாலேயே, சமரசம் இல்லாமல் உழைக்கிற மக்களின் கோரிக்கைகளுக்காக நாங்கள் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறோம். தமிழக அரசு சில நல்ல நகர்வுகள், நல்ல திட்டங்கள், நல்ல அரசியல் திசையில் அது நகர்கிறபோது, நாங்கள் அதை ஆதரிக்கிறோம். அதனால்தான் (த.வெ.க. ஆதரவு கட்சிகளின் கூட்டம்) முதற்கட்ட கூட்டத்துக்கு நாங்கள் ஏன் போகவில்லை என்றால், அது ஒரு விருந்து. விருந்தில் ஒரு கூட்டணி குறித்து பேசுவது என்பது உடன்பாடு அல்ல. 

நாங்கள் சென்றால் அந்தக் கூட்டணியில் பங்கேற்க இயலாது. எனவே, அந்த விருந்தின் தன்மை கெட்டுவிடக் கூடாது என்பதற்காக, நாங்கள் முன்கூட்டியே முதல்வரை சந்தித்து சொல்லிவிட்டோம். தேநீர் விருந்துக்கு வாழ்த்தையும் சொல்லிவிட்டோம். அப்பொழுது, நாங்கள் கூட்டணியில் இடம்பெறவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். இப்போது அதற்கான அழைப்பு, அதுபோன்ற ஒரு கருத்து எங்களிடம் முன்மொழியப்பட்டிருக்கிறது. ஆனால், அது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். கட்சி என்ன முடிவு செய்கிறதோ, அதை நாங்கள் செய்வோம்.

இப்போதும் நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். அமைச்சரவையில் இடம் பெறுவதில்லை, கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்பதுதான் எங்கள் நிலை. ஆனால், மாநிலத்தை ஆளுகிற ஒரு கட்சி எங்களிடம் சில அரசியல் கருத்துகளைச் சொல்கிறபோது, அதற்கு மதிப்பளித்து, அந்தக் கருத்துகளை கட்சியின் முன்னால் நாங்கள் தெரிவிப்போம்” எனத் தெரிவித்தார்.

Source link