மினி லாரி மோதி வி*பத்து: த.வெ.க. நிர்வாகிகள் உட்பட 3 பேர் உயிரி*ழப்பு!

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே மேலகுறியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆசைமணி மகன் குகன் (வயது 24). இவர் தமிழக வெற்றிக் கழக முகாம் செயலாளராகவும், எலக்ட்ரீஷியனாகவும் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கீழகுறியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் கலைராஜன் (வயது 41), தவெக கிளை செயலாளராக இருந்து வந்தார். இருவரும் வெள்ளிக்கிழமை எலக்ட்ரீசியன் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்திற்கு வந்துள்ளனர். 

இருப்பினும் வேலை கிடைக்காததால் இருவரும் மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் அஜித்குமார் (வயது 29) மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்றுள்ளார். இந்நிலையில், சி.முட்லூர் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த மினி டெம்போ இரு மோட்டார் சைக்கிள்கள் மீதும் அடுத்தடுத்து மோதியது. இதில் குகன், கலைராஜன், அஜித்குமார் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தவர்கள், மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கிள்ளை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு மோட்டார் சைக்கிள்கள் மீது மினி டெம்போ அடுத்தடுத்து மோதிய விபத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Source link