“ஒரு ஆட்சிக்கு இதைவிட சிறப்பான மகுடம் வேறொன்றும் இருக்க முடியாது”

தவெக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் வரும்  9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இக்கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை தவெக அமைச்சர்கள் நேரில் வழங்கி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, அமைச்சர்களான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தனர்.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அளித்த பேட்டியில், “முதலமைச்சர் விஜய் சார்பிலே அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் அவசியம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்ளும். சட்டமன்ற கூட்டத்தொடர் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால் மக்களுக்கு ஒரு தெளிவு ஏற்படுகிறது. அதனால் ஆளுகிற கட்சிக்கு தான் அது மக்கள் மன்றத்திலே ஆதரவைப் பெருக்கிக் கொடுக்கிறது. தொலைக்காட்சியிலே முழுமையாக வருவது மொத்தத்தில் நிர்வாகத்துக்கு நல்லது, ஜனநாயகத்துக்கு நல்லது. அப்படித்தான் நடக்கிறது. தொலைக்காட்சிகள் மூலமாக நடப்புகளை எல்லோரும் நன்றாக அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கிறது. 

அது ஆளுங்கட்சி தரப்பிலே, இவர்கள் என்னதான் எதிர்த் தரப்பிலே இருந்து கணைகள் பாய்ந்தாலும், அவற்றை இடைமறித்து சிறப்பாக பதில் சொல்லக்கூடிய ஆற்றலை அமைச்சர்கள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சாதிக்கிறார்கள். முதலமைச்சர் அன்றைக்கு ஆங்கிலத்திலே வாசித்தபோது, அது ஏதோ ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அவர் படித்துவிட்டு வந்த மாதிரி அந்த உச்ச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்தது. அன்றைய தினம் சட்டப்பேரவையில் முதலமைச்சரின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது.

‘ஊழலை ஒழிப்பது ஒன்றே எங்கள் குறிக்கோள்’ என்பதைச் சொன்னதோடு மட்டுமல்லாமல், இன்றைக்கு ஆர்டிஓ ஆபீஸாக இருக்கட்டும், பதிவுத்துறை அலுவலகமாக  இருக்கட்டும், எங்கே இருந்தாலும் அந்த கமிசன் என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் அதை முற்றிலும் அழித்து ஒழிக்கக்கூடிய விதத்திலே ஊழலை ஒழிப்போம் என்ற குறிக்கோளை நிறைவேற்றுவதிலே வெற்றி பெற்று வருகிறார்கள். ஒரு ஆட்சிக்கு இதைவிட சிறப்பான மகுடம் வேறொன்றும் இருக்க முடியாது. சட்டமன்ற இடமாற்றம் செய்யப்படுவதைப் பொறுத்திருந்து பார்ப்போம். எந்த இடம் என்னங்கிறதெல்லாம் பார்த்த பிறகு சொல்லுவோம்” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தவெக கூட்டணியின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டுவது, கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை முறைப்படி நியமிப்பது மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைக்கத் திட்டமிட்டுள்ளனர். 

Source link