ஆம்னி பஸ்களின் விதிமீறலை கண்காணிக்க 30 குழுக்கள்

சென்னை: அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க, 30 சிறப்பு குழுக்களை, தமிழக போக்குவரத்து ஆணையரகம் அமைக்க உள்ளது.

இதுகுறித்து, ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:

தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்கள் அதிகரித்து இயக்கப்படும். வரும் அக்., 2ல் காந்தி ஜெயந்தி வெள்ளிக் கிழமை வருகிறது.

அக்., 19 திங்கள் கிழமையில் ஆயுத பூஜை வருகிறது. அதுபோல், நவ., 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

எனவே, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல், வரி நிலுவை, அதிக சுமைகள் ஏற்றி செல்வது, உரிய ‘பர்மிட்’ இல்லாமல் இயக்குவது போன்ற பல்வேறு விதிமீறல்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

எனவே, திடீர் சோதனை நடத்தி, அவற்றை தடுக்க, தமிழகம் முழுதும், 30க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு வட்டார போக்குவரத்து அதிகாரி உட்பட மூன்று பேர் இருப்பர். இந்த சிறப்பு குழுக்கள், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பஸ் நிலையங்களிலும் திடீரென சோதனை நடத்துவர்.

ஆம்னி பஸ்களில் விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதிப்பது, ‘பர்மிட்’ ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link