பெருமாள் கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களை 7ம் தேதிக்குள் வெளியேற்ற ஐகோர்ட் உத்தரவு: 'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்

சென்னை: மேற்கு மாம்பலத்தில் உள்ள பெருமாள் கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்புகளை தடுக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வரும் 7ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பின்போது நீதிபதிகள், நம் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டினர்.

மேற்கு மாம்பலம், பாஷ்யகார ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர், 2025ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார்.

அமைச்சர் அறிவுரை

இதற்கு, கடந்தாண்டு ஆகஸ்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கையில், ‘கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தில் அன்னதான கூடமும், பக்தர்களின் வசதிக்காக இரு சக்கர வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட உள்ளது’ என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மனோகரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், ‘வாடகை பாக்கியில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பாளர்கள் செலுத்தி உள்ளதால், அவர்களுக்கே வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது’ என கூறப்பட்டிருந்தது.

மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் கார்த்திகேய பாலன் வாதிட்டார். அப்போது,”கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற அவசரம் காட்ட வேண்டாம். நீதிமன்ற உத்தரவு இருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

”இதுகுறித்து, ‘தினமலர்’ நாளிதழில், கடந்த ஆகஸ்டில் செய்தி வெளியாகி உள்ளது,” என்றார்.

இரு தரப்பு விசாரணைக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள 18 பேரில், ஐந்து பேரை அகற்றிவிட்டதாகவும், மீதமுள்ள 13 பேரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து ஓராண்டாகிறது; எந்த நடவடிக்கையும் இல்லை.

நிலைப்பாட்டில் மாற்றம்

அன்னதான கூடம், பார்க்கிங் அமைக்க போவதாக, முதலில் தெரிவித்த அறநிலையத்துறை, தற்போது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. வாடகை நிலுவை, 25.30 லட்சம் ரூபாய் உள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் செலுத்திய 1.42 லட்சம் ரூபாய் என்ற, 7 சதவீத சொற்ப தொகையை ஏற்றுக்கொண்டு, மீண்டும் அவர்களை வாடகைதாரர்களாக ஆக்க, அறநிலையத்துறை முயல்வது, நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்.

பொதுவாக நீதிமன்றங்கள், நாளிதழ் செய்திகளின் அடிப்படையில் செயல்படுவதில்லை; அவற்றை புறக்கணித்துவிடும். இருப்பினும், தற்போதைய வழக்கில், செப்., 2ம் தேதியிட்ட அறிக்கையில், அறநிலையத்துறை செயல் அலுவலர், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் விவகாரத்தில் காட்டிய திடீர் நிலைப்பாட்டு மாற்றம், ‘தினமலர்’ செய்தியுடன் ஒத்துப்போவதால், அதை பதிவு செய்வதைத் தவிர்க்க முடியவில்லை.

புராதன சின்ன ஆணைய அனுமதியின்றி, பழமையான இக்கோவில் வளாகத்தினுள் அன்னதானக்கூடம் கட்ட முடிவு செய் தது; உயர் நீதிமன்ற உத்தரவு களுக்கு முரணானது. எனவே, வரும் 7ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும். இதற்கு தேவையான போதிய போலீஸ் பாதுகாப்பை, மாநகர போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றியது குறித்து, செப்., 8ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Source link