நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியுடன் பி.வி.சிந்து டின்னர்; என்ன விசேஷம்?

சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் நட்சத்திர வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி.சிந்து. இவர் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் சாதனை படைத்திருக்கிறார். கடந்த 2024 டிசம்பர் 22 அன்று போசிடெக்ஸ் டெக்னாலஜிஸின் நிர்வாக இயக்குநர் வெங்கட தத்த சாயை திருமணம் செய்து கொண்டார். 
 
நயன்தாரா – விக்னேஷ் சிவன் விருந்து

இந்நிலையில், பி.வி.சிந்து தனது கணவர் வெங்கட தத்தா சாயுடன் சென்னையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை சந்தித்தார். நால்வரும் ஒன்றாக இரவு உணவு அருந்தி, நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்துள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை சிந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன், இந்த மாலை நேரம் தனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

“இன்னும் ஒரு குடும்பம் கிடைத்துவிட்டது”

இது தொடர்பாக சிந்து தனது பதிவில், “அழகான மாலை. அற்புதமான உணவு. மனம் திறந்த உரையாடல்கள், முடிவில்லாத சிரிப்புகள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “சில இரவு விருந்துகள், நாம் ஒருவரை ஒருவர் பார்க்கும் விதத்தையே மாற்றிவிடுகின்றன. நண்பர்களாக உள்ளே சென்று, வாழ்க்கை, காதல் என பல விஷயங்களைப் பற்றி பேசிவிட்டு, பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள் போல வெளியே வருகிறோம்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

சென்னை ஏற்கெனவே தனது அன்புக்குரியவர்களால் தனக்கு சொந்த ஊர் போல இருப்பதாக கூறிய சிந்து, இந்த சந்திப்புக்குப் பிறகு சென்னையில் தனக்கு “இன்னும் கொஞ்சம் குடும்பம் காத்திருக்கிறது” என்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை அன்புடன் குறிப்பிட்ட சிந்து, இருவரும் அன்பானவர்கள் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அன்பை வெளிப்படுத்திய நயன்தாரா – விக்னேஷ்

சிந்துவின் பதிவுக்கு நயன்தாரா, “உங்களுக்காக அன்பும் அன்பும் மட்டுமே” எனப் பதிலளித்துள்ளார். அதேபோல், விக்னேஷ் சிவனும் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். விளையாட்டு மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் ஒன்றாகக் கலந்துகொண்ட இந்த சந்திப்பு, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.



Source link