வேலையை விட்டு விலகிய உடனேயே உங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் வட்டி வருவது நின்றுவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. EPF விதிகளின்படி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வேலைவிட்ட பிறகும் குறிப்பிட்ட வயது வரை கணக்கில் வட்டி தொடர்ந்து சேரும்.
இதுகுறித்து ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இ.பி.எஃப்.ஓ. தனது சமூக வலைதளப் பதிவில் விளக்கம் அளித்துள்ளது.
क्या आप जानते हैं ईपीएफ खाते में कब तक मलिता है ब्याज और खाता कब हो जाता है इनऑपरेटिव?#EPFO#EPFOWithYou#HumHainNa#InoperativeEPFAccountpic.twitter.com/xk7vEfRFe8
— EPFO (@officialepfo) September 3, 2026
வேலையை விட்ட பிறகும் இ.பி.எஃப். வட்டி தொடருமா?
55 வயதிற்கு முன்பாகவே நீங்கள் வேலையை விட்டு விலகினால், EPF விதிகளுக்கு உட்பட்டு உங்களுக்கு 58 வயது ஆகும் வரை கணக்கில் உள்ள தொகையினுடைய வட்டி தொடர்ந்து கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படும்.
58 வயது முடியும் வரை உங்கள் கணக்கு செயல்பாட்டில் (Operative) இருப்பதாகவே கருதப்படும். அதனால் வட்டித் தொகை தொடர்ந்து கிடைக்கும்.
58 வயதை எட்டியதும், அந்த இ.பி.எஃப். கணக்கு “செயல்படாத கணக்காக” (Inoperative Account) மாறும். அதன் பிறகு அதற்கு வட்டி எதுவும் வழங்கப்படாது.
சுய விருப்ப ஓய்வு பெற்றால் வட்டி நிலவரம் என்ன?
ஒரு ஊழியர் 55 வயதை எட்டிய பிறகு ஓய்வு பெற்றால், அவர் ஓய்வு பெற்ற தேதியிலிருந்து 36 மாதங்களுக்குப் பிறகு (3 ஆண்டுகள்) அவரது கணக்கு செயல்படாத கணக்காக மாறும்.
ஒருவர் 50 வயதிலேயே வேலையை விட்டு விலகினாலும் (Early Retirement), அவருக்கு 58 வயது ஆகும் வரை EPF தொகைக்கு வட்டி கிடைக்கும். ஏனெனில், அவரது கணக்கு 58 வயதில் மட்டுமே ‘Inoperative’ ஆக மாறும்.
58 வயதில் ஓய்வு பெற்றால், 58 வயது வரை மட்டுமே வட்டி வரவு வைக்கப்படும்.
அதேபோல், 60 வயதில் ஓய்வு பெறும் ஊழியருக்கு, விதிகளின்படி, அதற்குப் பிறகு 36 மாதங்கள் வரை கணக்கு செயல்பாட்டில் இருக்கும் என்பதால், 63 வயது வரை வட்டி வழங்கப்படும்.
துல்லியமாகச் சொன்னால், 58 வயதை அடையும் வரை உங்களுடைய EPF கணக்கிலுள்ள பணத்திற்கு வட்டி தொடர்ந்து சேர்க்கப்படும்.
விஷ்வாஸ் (VISHWAS 2026) என்றால் என்ன?
மத்திய அரசு முதலாளிகளுக்காக (Employers) விஷ்வாஸ், 2026 என்ற ஒரு முறை தீர்வுத் திட்டத்தை (One-Time Settlement Scheme) அறிமுகப்படுத்தியுள்ளது
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சில வருங்கால வைப்பு நிதி தொடர்பான சர்ச்சைகளை குறைக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தி முடித்துக்கொள்ள இந்தத் திட்டம் முதலாளிகளுக்கு வாய்ப்பு வழங்குகிறது.
இந்தத் திட்டம் 2026 டிசம்பர் 28 வரை நடைமுறையில் இருக்கும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க முதலாளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தாமதமாக PF தொகையைச் செலுத்துவதற்கான அபராதம் ஆண்டுக்கு 37 சதவீதம் வரை செல்லக்கூடிய நிலையில், விஷ்வாஸ் 2026 திட்டத்தின் கீழ் தாமத காலத்தைப் பொறுத்து குறைக்கப்பட்ட விகிதத்தில் அபராதம் செலுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2 மாதங்கள் வரை தாமதம்: மாதத்திற்கு 0.25 சதவீதம்
2 முதல் 4 மாதங்கள் வரை தாமதம்: மாதத்திற்கு 0.50 சதவீதம்
4 மாதங்களுக்கு மேல் தாமதம்: மாதத்திற்கு 1 சதவீதம்
எனவே, இ.பி.எஃப். கணக்கு வைத்திருப்பவர்கள் வேலைவிட்டவுடன் வட்டி நிறுத்தப்பட்டுவிடும் என்று கருத வேண்டியதில்லை. குறிப்பாக 55 வயதுக்கு முன்பு வேலையை விட்டு வெளியேறும் நிலையில், 58 வயது வரை EPF கணக்கில் வட்டி கிடைக்கும் விதிகள் இருப்பதை ஊழியர்கள் தெரிந்துகொள்வது முக்கியம்.
