பிரதமர் வேட்பாளர் விவகாரம் : தொல். திருமாவளவன் எம்.பி. பேட்டி!

த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் வரும் 9ஆம் தேதி (09.09.2026) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து இக்கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை தவெக அமைச்சர்கள் நேரில் வழங்கி வருகின்றனர். அதே சமயம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த த.வெ.க. கூட்டணியின் 2வது ஆலோசனைக் கூட்டத்தில், த.வெ.க தலைமையில் கூட்டணி அமைப்பது, கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டுவது, கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை முறைப்படி நியமிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதோடு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விசிக தலைமை அலுவலகத்திற்கு இன்று (05.09.2026) வருகை தந்த த.வெ.க அமைச்சர்களான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண் ராஜ் ஆகியோர் விசிக தலைவர் தொல். திருமாவளவனை, சந்தித்து, த.வெ.க ஆதரவுக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளனர். 

இதனையடுத்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “த.வெ.க தலைமையில் அரசு அமைவதற்கு ஆதரவு நல்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் ஏற்கனவே நடந்தது. இரண்டாவது கட்டமாக, வருகின்ற 9ஆம் தேதி மாலை 4 மணி அளவில் முதலமைச்சர் விஜய்யின் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இது கூட்டணி தொடர்பான கலந்தாய்வுக் கூட்டமாகும். தவெக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறாத கட்சிகளும், குறிப்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட சில கட்சிகளும் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

கோப்புப்படம்

இந்தக் கூட்டத்தில், தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும். அதற்கான அழைப்பை விடுப்பதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலுக்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் முதலமைச்சர் விஜய்யின் சார்பில் அதிகாரப்பூர்வமாக வருகை தந்து அழைப்பு விடுத்திருக்கின்றனர். அந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்க உள்ளது” எனத் தெரிவித்தார்.

அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், “இந்திய அரசியல் வரைக்கும் இப்போது பிரதமர் வேட்பாளர்  யார் எனபது குறித்து பேசு பொருளாகி இருக்கிறது. உங்களுடைய நிலைப்பாடு என்ன?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குத் திருமாவளவன் பதிலளித்துப் பேசுகையில், “அது குறித்து 9ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்” எனத் தெரிவித்தார்.

Source link