அரசியல் ஆதாயம் தேடாமல் யாருக்கும் அஞ்சாமல் பயணிக்கும் தினமலர்; இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேச்சு

சென்னை: தினமலர் அரசியல் ஆதாயம் தேடாமல் எங்கள் நிறுவனர் டிவிஆர் வகுத்த பாதையில் யாருக்கும் அஞ்சாமல் பயணித்து இருக்கிறது என சென்னையில் நடந்த பவள விழா தபால் தலை வெளியிட்டு விழாவில் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

கடந்த 75 ஆண்டுகளாக, ஒரு செய்தித்தாளாக மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையின் குரலாக, ‘தினமலர்’ நாளிதழ் திகழ்ந்து வருகிறது. சொற்களில் அச்சமின்மை, கொள்கைகளில் தடம் மாறா உறுதி, உண்மையின் உரைகல் என, அர்ப்பணிப்புடன் பயணித்து வரும், ‘தினமலர்’ நாளிதழுக்கு, இந்த ஆண்டு பவள விழா.

அதை முன்னிட்டு, தபால் தலை வெளியீட்டு விழா, சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அரங்கில், இன்று (செப் 05) மாலை நடைபெற்றது. விழாவில் ‘தினமலர்’ இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: தினமலர் நாளிதழுக்கு நாளை 75 வயது ஆகிறது. தேசியம், தெய்வீகம் என்ற கோட்பாடுகள் உருவாக்கிய பாதையில் இருந்து இம்மி அளவும் விலகாமல், தினமலர் 75 ஆண்டுகளாக பயணித்து வருகிறது. தேசியம் என்றால் தேசப்பக்தி. தேசத்தின் நலனை முன்னிலைப்படுத்துவது, தேசத்தின் ஒருமைப்பாட்டை முன்னிலைப்படுத்துவது. தெய்வீகம் என்றால் தெய்வ பக்தி. தெய்வீக வழிப்பாட்டை ஊக்குவிப்பது, தர்மத்தை கடைபிடிப்பது, மக்களை தர்மத்தின் பக்கம் திருப்புவது.

எந்தவொரு தேசத்திலும் இந்த கோட்பாடுகள் கொண்டாடப்படும். ஆனால் பாரதத்தில் வேறு எந்த பிராந்தியத்திலும் இல்லாத அசாதாரணமான அரசியல் சூழலே தமிழகத்தில் நிலவி வந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக தேச பக்தியையும், தெய்வீக பக்தியையும் கேள்விகுறியாக்கி சவாலான கோட்பாடுகளாக மாற்றியது. தேச பக்தி பேசுபவர்கள் தமிழர்களுக்கு எதிரிகளாக சித்தரிக்கப்பட்டனர். தெய்வ பக்தி பேசுபவர்கள் பிற்போக்கானவர்களாக சித்தரிக்கப்பட்டனர். இருப்பினும் தினமலர், எங்கள் நிறுவனர் டிவிஆர் வகுத்த பாதையில் யாருக்கும் அஞ்சாமல் பயணித்து இருக்கிறது. இவ்வாறு இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

Source link