காத்மாண்டு: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கிய 2 பேர், 11 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
நேபாளத்தில் ஆக.26ம் தேதி ஏற்பட்ட பேரழிவின் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பலியானவர்கள், மாயமானவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும் தருணத்தில், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை மீட்பு படையினர் கைவிடவில்லை.
தென்கொரிய பேரிடர் மீட்புக்குழுவினருடன், நேபாளம் ராணுவம் தேடுல் வேட்டையை தொடர்ந்து வருகிறது. இந் நிலையில் மீட்புக்குழுவுக்கே ஆச்சரியம் தரும் வகையில், 11 நாட்கள் கழித்து இருவர், உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
நீர்மின் சுரங்க பாதையில் சேற்றில் சிக்கிய சீன தொழிலாளி லுஹைதாவோ என்பவரை மீட்புக்குழுவினர் முதலில் மீட்டனர். 225 மீட்டர் நீளமுள்ள சுரங்கபாதையில் சேற்றில் இருந்து அவர் சுயநினைவுடன் மீட்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
இதேபோன்று, நுவாகோட் பெட்ரவாதியில் சேதம் அடைந்த தனது வீட்டில் புதைந்திருந்த 64 வயது பெண்ணும் உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார். இவரின் பெயர் சந்திகா ஸ்ரேஸ்தா. பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக ஹெலிகாப்டரில் காத்மாண்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் தேடுதல் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் 11 நாட்களாக தவித்த இருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ள நிகழ்வு அனைத்து தரப்பிலும் ஆச்சரியம் கலந்த நெகிழ்ச்சி நிகழ்வாகவே கருதப்படுகிறது.
