மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியாவோரா பகுதியில் பாயும் அஜ்னார் ஆறு முற்றிலும் மாசடைந்து, குப்பைக் காடாகக் காட்சியளித்தது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் சவுத்ரி (பிட்டு தபாஹி) (வயது 20) எனும் இளைஞர் தனி ஆளாக இறங்கி சுத்தம் செய்துள்ளார். இவர், அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் உதவிக்காகக் காத்திருக்காமல், சுமார் ரூ.30,000 சொந்தப் பணத்தைப் போட்டு, தேவையான உபகரணங்களை வாங்கி இந்த ஆற்றைத் தூய்மைப்படுத்தத் தொடங்கினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 26 முதல் தினமும் 3 மணி நேரம் ஆற்றில் இறங்கி, வெறும் கைகளால் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாசிகளை அகற்றி, அந்த ஆற்றை மீட்டெடுத்துள்ளார். இந்த முயற்சியின் போது அவரது கைகளில் கடுமையான நோய்த் தொற்று பாதிப்புகளும் ஏற்பட்டன. இருப்பினும், அவர் எதையும் பொருட்படுத்தாமல், தனது தொடர் முயற்சியின் காரணமாக அந்த ஆற்றைச் சுத்தப்படுத்தினார்.
இது சம்பந்தமான வீடியோ சமூக வெளியான நிலையில், பலரும் அந்த இளைஞரைப் பாராட்டி வருகின்றனர். இதனிடையே, இவரது துணிச்சலான முயற்சியைப் பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, இந்த வீடியோவை தனது சமூக வலைத்தலப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த இளைஞரின் நற்செயலுக்கு நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அந்த இளைஞருக்குப் பாராட்டு தெரிவித்ததுடன், ”எங்களுடன் வந்து பணியாற்றுங்கள்” என எக்ஸ் தளத்தில் வேலைவாய்ப்பிற்கான அழைப்பும் விடுத்துள்ளார். இது சம்பந்தமான தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், அந்த இளைஞருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
