சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்: முதல்வர் விஜய்யின் லெகசி- ஐ.நா கண்ணன் கொடுத்த ஐடியா – tamil nadu new secretariat site outside of chennai suggests un ex officer r kannan

தமிழகத்தில் அமையவுள்ள புதிய தலைமை செயலகத்திற்கான இடம் தேர்வு பணிகள் மிகவும் மும்முரமாக நடந்து வருகின்றன. இது சென்னையில் அமையும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கும் நிலையில், ஐ.நா முன்னாள் அதிகாரி கண்ணன் சில தகவல்கள் பகிர்ந்துள்ளார். அதில் சென்னைக்கு வெளியே எனக் குறிப்பிட்டிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

புதிய தலைமை செயலகம் எந்த இடத்தில் வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பலருக்கு ஏற்பட்டுள்ளது. 20 லட்சம் சதுர அடியில் 1,200 கோடி ரூபாயில் கட்டப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பான ஆய்வில் கிண்டியில் 35 ஏக்கரும், பட்டினம்பாக்கம், நந்தம்பாக்கம் ஆகியவற்றில் தலா 20 ஏக்கர் நிலமும் உள்ளது. இந்த மூன்று இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எங்கு அமைந்தாலும் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட விஷயங்களை மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே திருமழிசை போன்று நகருக்கு வெளியில் ஓரிடத்தை தேர்வு செய்து கட்டினால் பரவலான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.

நெருக்கடியாக மாறிய செயிண்ட் ஜார்ஜ் கோட்டை

இதுதொடர்பாக ஐ.நா முன்னாள் அதிகாரி ஆர்.கண்ணன் கூறுகையில், புதிய தலைமை செயலகம் என்பது அவசியம். ஏனெனில் தற்போதுள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் 2 லட்சத்து 7 ஆயிரம் சதுர அடி மட்டுமே சட்டப்பேரவைக்கு உள்ளது. இந்த வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை மூன்றே முக்கால் லட்சம் சதுர அடியானது அரசு அலுவலகங்களுக்கு இருக்கிறது. இதுதவிர எழிலகம் உள்ளிட்ட பல இடங்களில் அரசு அலுவலகங்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றன. எனவே ஒருங்கிணைந்த தலைமை செயலகமாக ஒரு கட்டமைப்பை கொண்டு வர தவெக அரசு முயற்சிக்கிறது.

முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…இது தான் பிரேகிங் நியூஸ்

எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் திட்டம்

இதையொட்டி கடந்த கால அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை. தற்போது பெரும்பாலான எம்.எல்.ஏக்களிடம் கார் இருக்கிறது. கார் இல்லாதவர்களுக்கும் முதலமைச்சர் விஜய் அறிவிப்பால் விரைவில் கார் வந்துவிடும். மேலும் சுமார் 6 ஆயிரம் அரசு ஊழியர்கள் நாமக்கல் கவிஞர் மாளிகையில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரது வாகனங்களையும் நிறுத்துவதற்கான இடம் என்பது தற்போதைய தலைமை செயலகத்தில் மிகவும் நெருக்கடியாக உள்ளது. எனவே காலத்தின் தேவையை கருதி புதிய இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது.

சென்னையில் நிலவும் கடும் இட நெருக்கடி

எனக்கு ஒரு விஷயத்தில் மாற்று கருத்து உண்டு. சென்னைக்கு வெளியில் புதிய தலைமை செயலகம் அமைத்தால் என்ன? உதாரணமாக பிரேசிலை எடுத்துக் கொண்டால் ரியோ-டி-ஜெனிரோ தான் நம் அனைவருக்கும் தெரிந்த இடம். ஆனால் அந்நாட்டின் தலைநகர் அதுவல்ல. 1960ல் பிரேசிலியா என்ற இடத்திற்கு தலைநகரை மாற்றி விட்டார்கள். இதுபோன்ற உதாரணங்களை ஏராளமாக சொல்லலாம். இதேபோல் தமிழகத்திலும் திட்டமிடலாம். சென்னையில் தற்போதைய போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் பிரச்சினைகள், தினசரி ஏராளமான மக்கள் தங்களுக்கு வேண்டிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திக்க செல்வது போன்றவற்றால் நகருக்கு வெளியில் அமைப்பது சரியாக இருக்கும்.

முதலமைச்சர் விஜய் விட்டு செல்லும் லெகசி

இதற்கிடையில் திருச்சிக்கு தலைநகரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்கிறது. அங்கு தலைமை செயலகம் அமைப்பதாக வைத்துக் கொண்டால், சுமார் 6 ஆயிரம் ஊழியர்களின் குடும்பங்கள் அங்கு குடிபெயர வேண்டும். அது சாத்தியமில்லை. 1978ல் தான் 10 மாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையை தமிழக அரசு கட்டியது. அப்போது தமிழகத்தின் மக்கள்தொகை சுமார் 4 கோடி. தற்போது 8 கோடியை தாண்டி விட்டோம். நம்முடைய தேவைகள் பெருகிவிட்டன. அனைத்து விதமான விஷயங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி தன்னுடைய அடையாளமாக, சாதனையாக ஒரு விஷயத்தை விட்டு செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் விரும்புகிறார். அதன் தொடக்கம் தான் புதிய தலைமை செயலகம் என்று ஐ.நா கண்ணன் தெரிவித்தார்.

Source link