“எந்த மிரட்டலுக்கும் அரசு பணியாது” – ஊழியர்கள் சஸ்பெண்ட் குறித்து அமைச்சர் விக்னேஷ்!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த சூழலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்றப் பிறகு, கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த சூழலில், இனிமேல் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 1 ரூபாய் வாங்கினால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, கூடுதல் பணம் வாங்கினால் முதல் மூன்று மாதங்களில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அடுத்த முறையும் அதே தவறு நடந்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

இருப்பினும் தமிழ்நாட்டில் உள்ள பல டாஸ்மாக் கடை ஊழியர்கள், மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மதுபானத்துக்கு கூடுதலாக பணம் வசூலித்த 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்களை டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்து வருகிறது. இது ஒருபுறமிருக்க பணியிடை நீக்கம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மதுபாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க மறுத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய சித்த மருத்துவ வெளிநோயாளிகள் கட்டடத்தை அமைச்சர்கள் விக்னேஷ் சம்பத்குமார் ஆகியோர் சேர்ந்து நேற்று திறந்து வைத்தனர். அதன் பின்னர் பேட்டியளித்த அமைச்சர் விக்னேஷ், “டாஸ்மாக் துறையில் 200 படிக்கட்டுகள் துடைக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இதுவரை 75 படிக்கட்டுகள் துடைக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு தெரிந்து நிறைய கடைகளில் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லோருமே எம்.ஆர்.பி விலைக்கு தான் விற்பனை செய்கிறார்கள். சில இடங்களில் தொழிலாளர்கள், தவறான வழிநடத்தல் மூலமாக மதுவுக்கு கூடுதல் விலை விற்கின்றனர் . ஆனால் ஒரு போது இப்படி ஒரு மிரட்டலுக்கு அரசு பயப்படும், பணியும் என்று நினைத்தால் கண்டிப்பாக பணியாது. தப்புனா தான், பணம் யார் வாங்கினாலும் நடவடிக்கை உண்டு” என்று கூறினார்.  

Source link