அழகருக்கு திருவிடையாட்டம் வழங்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுப்பு!

சிவகங்கையை அடுத்துள்ள சோழபுரத்தில் 195 ஆண்டுகள் பழமையான சிவகங்கையின் ஜமீன்தார் இரண்டாவது முத்துவடுக நாதர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் சித்தட்டிக்கண்மாய்க்கரையில் நீளமான கல் ஒன்று கிடப்பதாக அவ்வூரைச் சார்ந்த பொன்.பாலசுந்தரம் சிவகங்கை தொல்நடைக் குழுவினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செயலர் இரா. நரசிம்மன் ஆகியோர் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து சிவகங்கை சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, ‘சிவகங்கை நகர் உருவாவதற்கு முன்பே சிவகங்கையைச் சுற்றியுள்ள சோழபுரம் போன்ற ஊர்கள் பெரிய ஊர்களாக இருந்துள்ளன. இதனாலேயே சோழபுரத்தில் தொடர்ச்சியாக பழங்கால கல்வெட்டுகள் கிடைத்து வருகின்றன. சோழபுரம் பிரிட்டிஷார் காலத்தில் தாலுகாவாகவும் இருந்துள்ளதை பழமையான ஆவணங்களின் அடிப்படையில் அறிய முடிகிறது. தற்போது கிடைத்துள்ள கல்வெட்டு அழகருக்கு திருவிடையாட்டமாக வழங்கப்பட்டுள்ளது. திருவிடையாட்டம் என்பது பெருமாள் கோவிலுக்கு வழங்கப்படும் நில தானத்தைக் குறிப்பதாகும்.

சுபமஸ்துவிகுரோதி வருஷம்மாசி மீ கவுல்பெற்ற ராசாவின் தன்மமாக அழகற்கு திருவிடையாட்டற்குட்ட பெரு நான்கு எல்லையாகும். சுபமஸ்து எனும் மங்களச் சொல்லோடு தொடங்கும் இக்கல்வெட்டு விக்குரோதி ஆண்டு மாசிமாதம், கவுல் உரிமை பெற்ற சிவகங்கை ராசாவின் தன்மமாக அழகருக்கு திருவிடையாட்டத்திற்கு வழங்கப்பட்ட பெரு நான்கு எல்லையாகும் எனக் குறிப்பிடுகிறது. கவுல் என்பது பிரிட்டிஷார் மக்களிடமிருந்து வரி வசூல் செய்ய வழங்கிய உரிமையைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். கல்வெட்டில் குறிப்பிடப்படும் விக்குரோதி ஆண்டு என்பது 1830-1831 ஆண்டைக் குறிப்பிடுகிறது. சிவகங்கையின் முதல் ஜமீன்தாராக 1801-ல் கௌரி வல்லவருக்கு பிரிட்டிஷாரால் முடி சூட்டப் பெற்றது, அவர் 1829 இல் மறைந்தார். அதன் பிறகு 1830-1831 ஆம் ஆண்டில் சிவகங்கையின் இரண்டாம் ஜமீன்தாராக இரண்டாம் முத்து வடுகநாதர் பதவி வகித்தகாலத்தில் இக்கல்வெட்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் அழகர் எனும் பெருமாள் கோவில் சோழபுரத்தில் அமைந்துள்ளதாகவோ அல்லது வேறு எங்கையாவது அமைந்த கோவிலாகவோ இருக்கலாம் அதைப்பற்றி தெளிவாக செய்தி குறிப்பிடப்படவில்லை.

கல்வெட்டு நான்கரை அடி உயரமுடையதாக உள்ளது. கல்வெட்டில் இடைப்பட்ட காலத்தில் வேறு ஏதோ பயன்பாட்டிற்காக நடுப் பகுதியில் காடி ஒன்று வெட்டப்பட்டுள்ளது. மூன்று பக்கங்களில் திருவாழிச்சின்னம் காணப்படுகிறன்றன, திருவாழிச்சினத்திற்கு கீழே 10 வரிகள் எழுதப்பட்டுள்ளன. காடி வெட்டிய பகுதியில் உடைந்து கல்வெட்டு இரண்டு துண்டாகக் காணப்படுகிறது, கல்வெட்டு உடைந்த இடத்தில் உள்ள வரியை வாசிக்க இயலவில்லை, கல்வெட்டின் அடிப்பகுதியில் தலை கீழாக திரிசூலம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சிவகங்கை வரலாற்றிற்கு மேலும் வலு சேர்க்கிறது, இதை சிவகங்கை தொல்நடைக்குழு அடையாளப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று தெரிவித்தார்.

Source link