பனாஜி: போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கோவாவில் நிருபர்களிடம் அமித்ஷா கூறியதாவது: போதைப்பொருள் இல்லாத இளைஞர் சக்தியுடன் 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடையும் என்பது பிரதமர் மோடியின் நோக்கமாகும். மோடி பிரதமராகப் பொறுப்பேற்றது முதல், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரதமர் மோடி பதவியேற்றபோது, நாடு மூன்று முக்கிய சவால்களை எதிர்கொண்டிருந்தது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் அங்கு அதிகரித்து வந்த பயங்கரவாத அச்சுறுத்தல்; நக்சலிசம்; மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய பல்வேறு ஆயுதமேந்திய குழுக்கள். இவை தவிர, உள்நாட்டுப் பாதுகாப்புச் சவால்களின் ஒரு பகுதியாகப் பல குண்டு வெடிப்புகளாலும் நாடு பாதிக்கப்பட்டிருந்தது. 2019க்குப் பிந்தைய காலக்கட்டத்தை உற்றுநோக்கினால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத உணர்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் ஜம்மு-காஷ்மீர் முன்னேற்றப் பாதையில் செல்கிறது. பயங்கரவாதச் சம்பவங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 50 ஆண்டுகளாக நீடித்த நக்சலிசப் பிரச்னை இப்போது கடந்த கால விஷயமாகிவிட்டது. இப்போது தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, சரணடைந்து, நாட்டின் வளர்ச்சி பயணத்தில் இணைய முன்வந்துள்ளனர். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
