புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு டில்லியில் செப்.11ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டில்லியில் செப்.12 மற்றும் 13ம் தேதிகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின்18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை 4வது முறையாக இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது.
மாநாட்டை முன்னிட்டு தலைநகர் டில்லி, உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டில்லி மாநகராட்சி சார்பில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந் நிலையில் மாநாடு தொடங்கும் முந்தைய நாளான செப்.11ம் தேதி டில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டில்லி கல்வி இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது, அரசு பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முக்கியவத்துவம் வாய்ந்த சர்வதேச உச்சி மாநாட்டையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக டில்லி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
பள்ளிகள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களுக்கும் செப்.11ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. செப்.12 மற்றும் செப்.13 முறை சனி மற்றும் ஞாயிறுக்கிழமை ஆகும். செப்.11ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
