இதனையடுத்து கைது செய்யப்பட்ட இந்த 5 பேரிடம் சாஸ்திரி நகர் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இக்கொலையானது கடந்த 2009ஆம் ஆண்டு அடையாற்றில் நடந்த சிவா என்பவரின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட பழிவாங்கும் தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் படுகொலை செய்யப்பட்ட கண்ணன் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவர் சமீபத்தில்தான் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார் என்பதும் போலீஸாரின் விசாரணையில் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி! ” எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், “நேற்றிரவு சென்னை அடையாறு அருகே, தவெக நிர்வாகியான கண்ணன் என்பவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காணொளி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரின் பொதுவெளியிலேயே இப்படி ஒரு கொடூரம் நடக்கிறது என்றால், தமிழகத்தின் மற்ற உள் (interior) கிராமங்களில் சட்டம் ஒழுங்கின் நிலை எப்படியிருக்கும் என நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.
ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் முழுதாக முடிந்த பிறகும் கூட, மக்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், சட்டம் ஒழுங்கில் சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தாமல், திங்கள் முதல் வெள்ளி வரை “9 to 5” என்ற கோட்பாட்டின் கீழ் மட்டுமே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். அதனால் தான் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 200க்கும் அதிகமான பாலியல் குற்றங்களும், கிட்டதட்ட 200 கொலைக் குற்றங்களும், ஆயிரக்கணக்கான போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன.
எனவே, சினிமாவைப் போல, சட்டமன்றத்தில் வசனம் பேசிக் கொண்டிருக்கும் ஜோசப் விஜய், தான் தமிழகத்தின் முதல்வர் என்பதை முதலில் உணர வேண்டும். கையை அசைப்பது போலவும், பாட்டிக்கு கண்ணாடி கொடுப்பது போலவும் ரீல்ஸ்களை எடுப்பதில் காட்டும் ஆர்வத்தையும் கவனத்தையும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் மீதும் கொஞ்சம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
