தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வர், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் தமிழக தமிழக சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அவர் தனது தொகுதியில் இருந்து அரசு கார் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
அவருக்கு பின்னால் எஸ்கார்ட் வண்டியும், அதற்கு பின்னால் அவரது சொந்த வாகனமான மாருதி எர்டிகா என்ற வாகனமும் வந்து கொண்டிருந்தது. அதிகாலையில் காட்டாங்குளம் சந்திப்பில் அவர் வந்து கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வந்த அவரது சொந்த கார், ஹோண்டா டியா என்ற இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இறையன்பு (26) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மறைமலைநகர் போலீசார், அமைச்சரின் சொந்த காரை பறிமுதல் செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வாகனம் அமைச்சர் ஜெகதீஸ்வரில் பெயரில் பதிவாகி இருப்பதாகவும், அந்த காரை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
