சென்னையில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் அமையவுள்ளது என்பதை அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சுமார் 25.16 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த புதிய வளாகத்தை கட்டுவதற்காக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) ஆகியவை அந்த நிலத்தைப் பயன்படுத்துவதற்கான ‘நுழைவு அனுமதி’ சனிக்கிழமையன்று வழங்கியுள்ளன. இத்திட்டத்திற்கான கொள்கை அளவிலான நிர்வாக அனுமதியை வழங்கி தமிழக அரசு விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வளாகத்தின் முதன்மைக் கட்டடம் 15 தளங்களுடன், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது. சாந்தோம் நெடுஞ்சாலையை இணைக்கும் வழியைக் கொண்ட இந்த வீட்டுவசதி வாரிய நிலத்தின் வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.22,000 ஆக உள்ளது; இதன்மூலம் இந்த நிலத்தின் மொத்த உத்தேச மதிப்பு மட்டுமே ₹2,047 கோடியாகும். இந்த புதிய தலைமைச் செயலக வளாகம் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்படும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, தலைமைச்செயலகத்திற்காக ஃபோர்ஷோர் எஸ்டேட், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய நிலம் மற்றும் நந்தம்பாக்கத்தில் ஃபின்டெக் சிட்டிக்கு எதிரே உள்ள இடம் ஆகிய மூன்று பகுதிகளை அரசு பரிசீலனை செய்தது. ஆனால், ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் தொடர்ச்சியாக நிலம் கிடைப்பதால் அதுவே மிகவும் பொருத்தமான இடமாகத் தேர்வு செய்யப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசின் அதிகாரப்பூர்வ கோரிக்கையை ஏற்று, மயிலாப்பூரில் தனக்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலத்தைப் பொதுத்துறை பயன்படுத்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சனிக்கிழமை அனுமதி அளித்தது. இந்த நிலம் சர்வே எண்கள் 4593/1 (0.55 ஏக்கர்), 4593/29 (0.15 ஏக்கர்) மற்றும் 4593/33 (20.67 ஏக்கர்) ஆகிய 3 பிரிவுகளைக் கொண்டது. இந்த நிலங்கள் வீட்டுவசதி திட்டங்களுக்காக 1958-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டவை ஆகும்.
1963 முதல் 1968 வரை இங்கு 1,112 அரசு ஊழியர் குடியிருப்புகளும், 96 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளும் கட்டப்பட்டன. பின்னர் 1986-ல் 60 குடியிருப்புகளும், 1998-ல் 112 குடியிருப்புகளும் கட்டப்பட்டு, மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை 1,380 ஆக உயர்ந்தது. இவற்றில் பழுதடைந்த நிலையில் இருந்த 1,284 குடியிருப்புகள் ஏற்கனவே இடிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக அந்த இடம் காலியாகவே இருந்து வருகிறது. தற்போது எஞ்சியுள்ள தனது 96 குடியிருப்புகளையும் இடிப்பதற்கான நடவடிக்கைகளை வீட்டுவசதி வாரியம் தொடங்கியுள்ளது.
அரசு விதிகளின்படி இந்த நிலத்தின் மதிப்பைக் கணக்கிட்டு வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்றும், சாத்தியமானால் இதற்கு மாற்றாக வேறு நிலத்தை இழப்பீடாக வழங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் வீட்டுவசதி வாரியம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் சென்னை ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில், சர்வே எண்கள் 7588/2 மற்றும் 4592/79 ஆகியவற்றின் கீழ் வரும் நிலங்களைப் பயன்படுத்துவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது.
1997-ம் ஆண்டில் அரசு வாடகை வீடுகள் கட்டுவதற்காக மயிலாப்பூர் கிராமத்தில் உள்ள சர்வே எண் 7588/2-ல் 1.13 ஏக்கர் நிலத்தை அரசு மாற்றியளித்தது. சர்வே எண் 4592/79-ல் உள்ள 1.73 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், வருவாய்த்துறை ஆவணங்களின்படி அது ‘அரசு புறம்போக்கு’ நிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றுடன் கூடுதலாக, பொதுத்துறை பயன்பாட்டிற்காக 0.93 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 5 அன்று மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் அனுப்பிய கடிதத்தின்படி, சர்வே எண் 4593/2-ன் கீழ் உள்ள இந்த நிலம் சாலை பயன்பாட்டிற்காக வகைப்படுத்தப்பட்டதாகும். இந்நிலங்கள் அனைத்தும் சேர்ந்து மொத்தம் 25 ஏக்கராக உள்ள நிலையில், வருவாய்த்துறையின் கீழ் உள்ள சில கூடுதல் நிலங்களையும் சேர்க்கும்போது இந்த புதிய தலைமைச் செயலக வளாகத்தின் மொத்த பரப்பளவு 26.5 ஏக்கராக இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
