தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், நாட்டில் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக விமர்சிக்கும் “தேய்ந்துபோன அரசியல் நாகரிகத்தைக்” கடுமையாகச் சாடியதுடன், பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காட்டமாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை தொடர்பாக தனது பதிலுரையில் பேசியதாவது: “நான் ஒரு சின்ன வேண்டுகோளை சட்டசபையில் வைக்கிறேன். இதுவும் சட்டம் ஒழுக்கு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். இந்த கருத்துரிமை, பேச்சுரிமை இதையெல்லாம் எந்த அளவுக்கு முறையாகப் பயன்படுத்துகிறார்கள் என்று யோசிக்க வேண்டும். அரசியல் ரீதியாக ஒருத்தருக்கு ஒருத்தர் கடுமையாக விமர்சனம் செய்துகொள்ளலாம். அதை மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எதை எடுத்துக்கொள்ள வேண்டும், எதை விட்டுவிட வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அதே அரசியலுக்காக, நம்ம மக்களையோ, பெண்களையோ வேறு யாரையும் தாழ்த்தி தரம் தாழ்ந்து பேசுவது வேண்டாம் என்பதுதான் வேண்டுகோள். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் சமீப காலமாக தமிழ்நாட்டில் ஆபாச நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது, வன்ம நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நதிகளை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பெண்களைப் பற்றி அசிங்கமாக, இரட்டை அர்த்தத்தில் பேசுவது என எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், எல்லாருக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். நம்முடைய விட்டில் தாயாக, அக்காவாக, தங்கச்சியாக கூடவே இருப்பவர்கள் அதே பெண்கள்தான். அதை மனதில் வைத்துக்கொண்டு எல்லாரும் முறையாக பேசினால் நன்றாக இருக்கும்.
தனிப்பட்ட முறையில் சொல்வதானாலும்கூட, இதற்கு முன்னாடி மக்கள் எனக்கு கொடுத்த இடமாக இருந்தாலும், இப்போது மக்கள் எனக்கு கொடுத்த இடமாக இருந்தாலும் பல காரணங்கள் இருக்கிறது. இருந்தாலும் இது சாத்தியமானதற்கு முக்கிய காரணம் நம்ம வீட்டு பெண்கள்தான். பெண்களைப் பற்றி யாராவது அவதூறாக, அசிங்கமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்.
நான் அரசியல் காரணமாக, அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக பேசுகிறேன் என்று யாராவது நினைத்துக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பாக முடியாது. அந்த எண்ணத்தில் நாம் அரசியலுக்கு வரவில்லை, அது அவசியமும் இல்லை. நாம் அதை செய்யப்போவதும் இல்லை. ஏனென்றால், கடந்த காலங்களில் நடந்த நிறைய விஷயங்களை நாம் கேள்விப்படுகிறோம். இதே சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானங்களை சந்தித்திருக்கிறார் என்பதை நாம் கேள்விப்படுகிறோம்.
இதே இந்த எதிர்க்கட்சியினால் அவர் எவ்வளவு அவமானங்களை சந்தித்திருக்கிறார் என்பதை எல்லாம் நாம் கேள்விப்படுகிறோம். அதனால், வருங்காலத்தில் எந்தப் பெண்களுக்கும் அதெல்லாம் நடந்துவிடக்கூடாது என்பதில் ரொம்ப தெளிவாக இருக்கிறோம்.
தொழில்நுட்பம், நாகரிகம் எல்லாம் வளர்ந்து வேறு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. அதனால், மறுபடியும் சொல்கிறேன், அரசியல் ரீதியாக நீங்கள் என்ன வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம், அது கடுமையான கருத்தாகக் கூட இருக்கலாம். அதில் தப்பு இல்லை. அதுதான் கருத்துரிமை, பேச்சுரிமை.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி, உறுப்பினர் ஒருவர் பேசினார். ஏதோ ஆர்த்தோ சர்ஜரி டாக்டர் போல, சட்ட சபைக்குள்ளேய் எலும்பை உடைப்பாராம். இந்த மாதிரி பேச்சு எல்லாம் எதற்கு என கேட்கிறேன். இதுதான் அரசியலா? இப்படி பேசுவதுதான் அரசியலா, இப்படி பேசிப் பேசித்தான் மக்கள் அதைப் பார்த்துதான் அவர்ர்கள் அந்தப் பக்கம் (எதிர்க்கட்சி வரிசை) உக்காரந்துகொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் உங்களுக்கு அறிவுரை கூற வரவிலை. இதுதான் யதார்த்தம். தி.மு.க உறுப்பினர் ஒருவர் பேசுகிறார், மக்கள் தி.மு.க-வுக்கு ஓட்டு போடாததால் நல்ல சாவே வராது என்று பேசியிருகிறார். இதே மக்கள்தான் 50-60 வருடமாக அவர்களுக்கு ஓட்டு போட்டுக்கொண்டிருந்தார்கள், எப்படி அவர்கள் வாயில் இப்படி ஒரு வார்த்தை வருகிறது. என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை எப்போது இவர்களுக்கு இல்லையோ, இவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என்ற கேள்விதானே வரும். மக்கள் தீர்ப்பை கொஞ்சமாக மதிக்கவேண்டும். இது எல்லாத்தையும் விட இந்த ஆபாச நதி, வன்ம நதி பல ஆண்டுகளாக, அரசியலில் இருக்கிற பெரியவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்றால் இதில் என்ன தப்பு இருக்கிறது, நாங்கள் அந்தக் காலத்தில் பேசாதப் பேச்சா என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு அது தப்பு என்றே தெரியவில்லை. அதை நியாயப்படுத்துகிறார்கள். அந்த காலத்து அரசியலில் இருக்கிற நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்வோம். அவதூறாகப் பேசுகிற அரசியலை, அசிங்கமாகப் பேசுகிற அரசியல், துருப்பிடித்த அரசியல், தேய்ந்துபோன அரசியல் நமக்கு எதற்கு? அரசியல் ஒழுக்கம், அரசியல் நாகரிகம் தேவை” என்று முதலமைச்சர் விஜய் காட்டமாகப் பேசினார்.
