‘ரதீஷ்… இவர் யாருக்கு நெருக்கமானவர்? நம்ம ஆட்சி வந்ததும் ஏன் துபாயில் ஒழிந்தார்?’ சட்ட சபையில் விஜய் கேள்வி

“எங்களுடைய அரசியல் அனுபவம் பற்றி தெரியுமா?” எனக் கேட்கும் தி.மு.க-வின் உண்மையான பாரம்பரியத்தைச் சர்க்காரியா கமிஷன் அறிக்கையும், அமலாக்கத்துறையின் ஆவணங்களுமே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன என்று சாடிய முதல்வர் விஜய், டாஸ்மாக் முறைகேடுகளில் தொடர்புடைய ‘ரதீஷ்’ என்பவர் புதிய அரசு அமைந்ததும் ஏன் துபாயில் போய் ஒளிந்துகொண்டார் எனக் கேள்விகளை எழுப்பிக் காட்டமாகப் பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் டாஸ்மாக் விவகாரங்களில் அமலாக்கத்துறை (இ.டி) தாக்கல் செய்த ஆவணங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். இதில் அதிகாரத் தரகராகச் செயல்பட்ட ரதீஷ் என்பவர் துபாயில் ஒழிந்தத் ஏன், பின்னணி என்ன என்று எதிர்க்கட்சியான தி.மு.க-வை நோக்கிப் பேரவையில் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.

முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசியதாவது: “மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டோம்; தொட்டவர்களையும்  விடமாட்டோம்” என்று கடந்த வாரம் பேசும்போது, என் டேபிளில் மூன்று துறைகள் தொடர்பான கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்பேன் என்றும் கூறியிருந்தேன்.

உடனே எதிர்க்கட்சியினர், “இப்போதே அந்தக் கோப்புகளைத் திறந்து காட்டுங்கள்” என்று சவால் விட்டார்கள். அதைத் திறப்பதற்கு முன்னால் ஒரு சிறிய சாம்பிளைப் பார்ப்போமா?

கடந்த தி.மு.க. ஆட்சிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்கள் இருக்கின்றன. நான் மறுபடியும் சொல்கிறேன். நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்குள் நான் செல்லவில்லை. அந்த விசாரணை தொடர்பாக எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. ஆனால், அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்களில் இருக்கக்கூடிய சில தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது.

இதை முழுமையாகப் படித்தால் இரண்டு மூன்று நாட்கள் ஆகும். அதனால் அதன் ஹைலைட்ஸை மட்டும் படிக்கிறேன். முதலில் சர்க்காரியா கமிஷனில் என்ன இருக்கிறது என்று கொஞ்சம் பார்ப்போம்.

1970-களில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, வீராணம் திட்டத்துக்கான குழாய்களைத் தயாரிக்கும் பணிக்காக சத்தியநாராயணா பிரதர்ஸ் என்ற நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சர்க்காரியா விசாரணை கமிஷன் விசாரணை நடத்தியது.

அந்த கமிஷனின் இறுதி அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு தொகுதி ஒன்றில், ‘வீராணம் திட்டம்’ என்று ஒரு தனி அத்தியாயமே இருக்கிறது. சுமார் 80 பக்கங்கள் அந்த அத்தியாயத்தில் உள்ளன. 71-வது பக்கத்தில் இருந்து 150-வது பக்கம் வரைக்கும் அந்த அத்தியாயம் இடம்பெற்றிருக்கிறது.

அதில், டெண்டர் வேண்டுமென்றால் இரண்டரை சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்று கலைஞரோடு தொடர்புடைய மாறன் கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த டெண்டரின் மதிப்பு ரூ.16 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ரூ.16 கோடிக்கு இரண்டரை சதவீதம் என்றால் சுமார் ரூ.40 லட்சம் கமிஷன் வரும். இந்தக் கணக்கு நான் உருவாக்கிச் சொல்வது கிடையாது. விசாரணை கமிஷன் அறிக்கையிலேயே இருக்கிறது.

2001-ம் ஆண்டு இதே அவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பொன்னையன் இதே சர்க்காரியா விசாரணை கமிஷன் அறிக்கையைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அப்போதுதான் இந்த சத்தியநாராயணா பிரதர்ஸ் என்ற பெயரும், அவருடைய மருமகன் தொடர்பான பெயரும் வெளிவந்திருக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு விஷயத்தை, 25 ஆண்டுகளுக்கு முன்னால் இதே சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார்கள் என்று சொல்லி, கொஞ்சம் தோண்டிப் பார்த்தோம். அப்போதுதான் பல விஷயங்கள் வெளியில் வர ஆரம்பித்தன.

அப்படி பார்த்தால் அந்த அறிக்கைக்கு பொன்விழா ஆண்டே வந்துவிட்டது. பவளவிழாவை நோக்கியும் அது செல்கிறது. அதாவது, கட்சியின் பொன்விழா கண்ட சாதனைகளில் இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் ஒன்று போலிருக்கிறது.

இது மட்டுமல்ல; முரசொலி கட்டிடம் கட்டுவதற்காகவும் பல்வேறு வகையில் பணம் கொடுத்திருக்கிறார்கள். ரொக்கமாகவும் கொடுத்திருக்கிறார்கள்; பொருட்களாகவும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

கலைஞர் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. தவறாக அவருடைய பெயரை குறிப்பிட்டதற்காக மன்னிப்பும் கேட்க சொல்லியிருக்கிறேன். அவருடைய பெயரின் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. இவை எங்களுடைய சொந்தக் குற்றச்சாட்டுகள் அல்ல. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள். இதில் என்னதான் நடந்திருக்கிறது என்று தொடர்ந்து படித்துக்கொண்டே போனால், அந்த அறிக்கையில் எப்படி குறிப்பிடப்பட்டுள்ளது தெரியுமா?

சத்தியநாராயணா பிரதர்ஸுக்கு டெண்டர் வழங்குவதற்காக அப்போதைய முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அவர்கள் தன்னுடைய முதலமைச்சர் பதவியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ‘தமிழக முதலமைச்சர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் டெண்டர் தொகையை குறைத்துப் போடச் சொல்லி, அதற்காக தலைமைப் பொறியாளராக இருந்த உசேனை கட்டாயப்படுத்தினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் நான் இப்போது பேசியிருக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ‘எங்களுடைய அரசியல் பாரம்பரியம் பற்றி தெரியுமா? எங்களுடைய அரசியல் அனுபவம் பற்றி தெரியுமா? எங்களுடைய அரசியல் சீனியாரிட்டி பற்றி தெரியுமா?’ என்று வீர வசனங்களையெல்லாம் பேசுவார்கள் அல்லவா?

அவர்களுடைய சீனியாரிட்டி என்ன? அவர்களுடைய அனுபவம் என்ன? அவர்களுடைய அரசியல் பாரம்பரியம் என்ன? என்பதை மக்களிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது அல்லவா? இதையெல்லாம் சொன்னால் எழுந்து ஓடினாலும் ஓடிவிடுவார்கள். அதற்கு நாம் பொறுப்பல்ல.

இப்போதும் சொல்கிறேன். நீங்கள் ஆதாரம் கேட்டீர்கள் என்றால், நீங்கள் பார்லிமென்ட்டுக்கெல்லாம் போக வேண்டிய அவசியமில்லை. இங்கே நம்முடைய சட்டப்பேரவைக்குள்ளேயே நூலகம் இருக்கிறது. அங்கே போய் தேடிப் பாருங்கள்.

சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் அங்கே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்தப் புத்தகம் இன்னும் அங்கே இருக்கிறது. ‘மிஸ்டர் க்ளீன், மிஸ்டர் க்ளீன்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள் அல்லவா? அப்போதே இப்படியென்றால், இப்போது யோசித்துப் பாருங்கள். மிஸ்டர் க்ளீனா? அடுத்து, அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்களில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள்.

தி.மு.க.வுக்கு எப்போதுமே ஒரு கணக்கு உண்டு. ஆதாரத்தைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு, மற்றவர்களிடம் போய் ஆதாரத்தைத் தேடிக்கொண்டிருப்பார்கள். அப்படித்தான் நான் கட்சிப் பணம் என்று சொன்னபோதும் ஆதாரம் கேட்டார்கள். இப்போதும் சொல்கிறேன். ஆதாரம் பக்கத்திலேயேதான் இருக்கிறது. இந்த அமலாக்கத்துறை விஷயத்துக்கு வருவோம். அமலாக்கத்துறை சில நூறு பக்கங்களில் ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறது.

கட்சிப் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று ஒரு ஆவணத்தை தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதே கொடுத்திருக்கிறது. அதிலும் கட்சிப் நிதி பற்றி சொல்லியிருக்கிறது. அதில் அவர்கள் செய்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்தும் சொல்லியிருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக நாங்கள் நீதிமன்ற விஷயத்தில் தலையிடவில்லை. அதைப் பற்றி எந்தக் கருத்தையும் நாங்கள் சொல்லவில்லை.

அவர்களுக்கு கட்சி நிதி தொடர்பான ஆதாரம்தானே வேண்டும்? அதனால்தான் சொல்கிறேன். இந்த விஜய் சொல்வது மட்டும் அல்ல. அமலாக்கத்துறையே சொல்லியிருக்கிறது. அதில் என்ன இருக்கிறது என்று கொஞ்சம் கேட்போம். 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரைக்கும் வாங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் விவகாரங்களில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் முறைகேட்டில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதில் தனிப்பட்ட நபர்கள் சிலரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் ரதீஷ் என்று ஒருவர். பல அதிகாரிகளின் பணியிடமாற்றத்தை குறிப்பாக பி.ஆர்.ஓ அளவிலான அதிகாரிகளின் பணியிட மாற்றத்தை இவர்தான் முடிவு செய்திருக்கிறார். இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், மத்திய முகம், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத  ‘பவர் புரோக்கர்’ (அதிகாரத் தரகர்) எவ்வளவு பெருமையாக சொல்லியிருக்கிறது பாருங்கள். இந்த ரதீஷ் உத்தரவின்படிதான் டாஸ்மாக் எம்.டி-யாக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியே செயல்பட்டார் என்று அமலாக்கத்துறையே சொல்லியிருக்கிறது. யார் இந்த ரதீஷ், யாருக்கு நெருக்கமானவர்? நம்முடைய அரசு வந்ததற்கு பிறகு இவர் ஏன் துபாயில் போய் ஒழிந்துகொண்டார்? யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை வருடமாக ரதீஷ் இதை செய்துகொண்டிருந்தார்? பதில் சொல்வார்களா? கடவுளுக்குதான் வெளிச்சம்.” என்று முதலமைச்சர் விஜய் ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் பேசினார்.

Source link