“கலைஞர் தனது பதவியை தவறாக பயன்படுத்தினார்”

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி முதல்வர் விஜய் தாக்கல் செய்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு இன்று (07-09-26) முதல்வர் விஜய் பதிலளித்தார்.

அப்போது அவர், “கடந்த வாரம் பேசும் போது டேபிளில் மூன்று ஃபைல் இருக்கிறது என்று சொன்னேன். அதை உடனே திறங்கள் என்று எதிர்க்கட்சியில் இருந்து சவால் விட்டார்கள். இப்போது அதை திறப்பதற்கு முன்னாடி ஒரு சின்ன சாம்பிள் பார்க்கலாம். கடந்த திமுக ஆட்சிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணம் இருக்கிறது. அந்த ஆவணத்தில் இருக்கிற தகவல்களை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். 1970இல் திமுக ஆட்சி இருந்த போது சத்தியநாராயணா பிரதர்ஸ் என்ற கம்பெனிக்கு வீராணம் திட்டத்துக்கான குழாய்கள் தயாரிக்கிற டெண்டர் கொடுத்த விவகாரம் பற்றி சர்க்காரிய விசாரணை கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. 71வது பக்கத்தில் இருந்து 150வது பக்கம் வரைக்கும் இருக்கும் அந்த சாப்டரில், டெண்டர் வேண்டுமென்றால் இரண்டரை சதவீதம் கமிஷன் வேண்டுமென்று கலைஞருடைய மருமகன் மாறன் கேட்டாராம். டெண்டர் 16 கோடிக்கும் அதிகம். 16 கோடிக்கு இரண்டரை சதவீதம் என்றால் 40 லட்சம் ரூபாய் கமிஷனாக வரும் என்று கணக்காம். இந்த கணக்கும் விசாரணை கமிஷன் அறிக்கையில் தான் இருக்கிறது.

2001இல் இதே அவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் முன்னாள் அமைச்சர் பொன்னையனும் இதே சர்க்காரிய விசாரணை கமிஷன் அறிக்கையை பற்றி பேசினார்கள். அப்போது தான் சத்திய நாராயணன் பெயரும், அவருடைய மருமகன் புருஷோத்தமம் பெயரும் வந்தது. 50 வருடத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்தை 25 வருடத்துக்கு முன்னாடி இதே சபையில் பேசியிருக்கிறார்கள் என்று கொஞ்சம் தோண்டி எடுத்தோம். அப்போது தான் எல்லா கூத்தும் வெளியே வர ஆரம்பித்தது. பவள விழா கட்சியிடைய பொன்விழா கண்ட சாதனை தான் இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை. அந்த அறிக்கையில் புருஷோத்தம் சொன்னபடி பார்த்தால் 1970இல் இருந்து 1974 வரைக்கும் 7 தவணை முறையில் மொத்தம் 29 லட்சம் ரூபாய் கையூட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனக்கு கலைஞர் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. இதெல்லாம் எங்களுடைய குற்றச்சாட்டு அல்ல, அந்த அறிக்கையில் இருக்கிற குற்றச்சாட்டு.

அந்த அறிக்கையில், சத்தியநாராயணா பிரதர்ஸுக்கு டெண்டர் தருவதற்காக அப்போதைய முதல்வர் கலைஞர் தன்னுடைய முதல்வர் பதவியை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்று சொல்லிருக்கிறது. அரசு ஏற்றுக்கொள்கிற மாதிரி டெண்டரை குறைத்து போட சொல்லி அதற்காக தலைமை பொறியாளராக இருந்த உசேனை கட்டாயப்படுத்தினார் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இப்போது சொல்கிறேன் என்றால், எங்களுடைய அரசியல் பாரம்பரியம் பற்றி தெரியுமா? எங்களுடைய அரசியல் அனுபவம் பற்றி தெரியுமா? எங்களுடைய அரசியல் சீனியாரிட்டி பற்றி தெரியுமா? என்று வீர வசனம் எல்லாம் பேசுவார்கள். அவர்களுடைய அரசியல் சீனியாரிட்டியைப் பற்றி, அரசியல் பாரம்பரியத்தைப் பற்றி மக்களுக்கு நாம் எடுத்து சொல்ல வேண்டும். நீங்கள் ஆதாரம் கேட்டால், நாடாளுமன்றம் வரைக்கும் எல்லாம் போக தேவையில்லை, நம் சட்டசபைக்குள் நூலகம் இருக்கிறது. அங்கே போய் தேடி பாருங்கள்” என்று ஆவேசமாகப் பேசினார். 

Source link